ADDED : செப் 23, 2024 06:19 AM

போலி பட்டா: தயாரித்தவர் கைது
மேலுார்: திருவாதவூரில் அரசு மற்றும் பஞ்சமர் தரிசு நிலங்களுக்கு போலி பட்டா வழங்குவதாக வி.ஏ.ஒ., மந்தக்காளைக்கு தகவல் கிடைத்தது. மேலுார் போலீசில் புகார் கொடுத்தார். எஸ்.ஐ.,ஜெயக்குமார் விசாரணையில், 'இப் பகுதியில் உள்ள பஞ்சமர் நிலங்களுக்கு கலெக்டர் அலுவலக கோபுர முத்திரை, தனித் தாசில்தாரின் கையெழுத்தை தயார் செய்து, அச்சிட்டு, போலியாக பட்டா தயாரித்து மக்களிடம் வழங்கி, ஏமாற்றி பணம் வசூலித்தது திருவாதவூர் ஆனந்த் 36, எனத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஆக. 31 ல் போலி பட்டா தயாரித்த டி.மாணிக்கம்பட்டி அய்யனாரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
புகையிலை விற்றவர் கைது
மேலுார்: பதினெட்டாங்குடி பகுதியில் மேலுார் போலீஸ் தினேஷ் ரோந்து சென்றார். அப்போது பெட்டிக்கடையில் புகையிலை விற்ற அதே ஊரைச் சேர்ந்த அன்பரசுவை 30, கைது செய்து 456 கிராம் புகையிலையை பறிமுதல் செய்தார்.
பைக்கில் சென்றவர் பலி
மதுரை: பழங்காநத்தம் வடக்குத் தெரு கருப்பு 50. ஆஸ்டின்பட்டி அருகே டூவீலரில் சென்றபோது தவறி விழுந்தார். தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவி நாகமணி புகாரின்பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
குடியை கெடுத்த குடிப்பழக்கம்
மதுரை: கண்ணனுார் நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் தவமணி 28. இவரது மனைவி செல்வராணி. ஒரு பெண் குழந்தை உள்ளது. தவமணி தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனமுடைந்த தவமணி, ஏ.கொக்குளம் ஆதிசிவன் கோயில் அருகே விஷம் குடித்து இறந்துள்ளார். அவரது தந்தை காட்டு ராஜா போலீசில் புகார் அளித்தார். செக்கானுாரணி போலீசார் விசாரிக்கின்றனர்.