ADDED : செப் 27, 2024 06:52 AM
மூச்சுத்திணறி குழந்தை பலி
அலங்காநல்லுார்: அ.புதுப்பட்டி முனியாண்டி கோயில் தெரு கூலித் தொழிலாளி ராஜமாணிக்கம் 35, ராமசந்தியா 30, தம்பதி. இவர்களுக்கு 2, 5, 6 வயதுகளில் 3 பெண் குழந்தைகள் உள்ளது. செப்.8ல் ராமசந்தியாவுக்கு 4வது பெண் குழந்தை பிறந்தது. நேற்று முன்தினம் இரவு குழந்தையை குளிக்க வைத்தபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியது. அலங்காநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை போலீசார் மதுரை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர்.
----கண்டக்டர் பலி
பேரையூர்: அத்திபட்டி நாகராஜ் 28, தனியார் பஸ் கண்டக்டர். அத்திப்பட்டியில் இருந்து மங்கல்ரேவில் உள்ள ஏ.டி.எம்., மில் பணம் எடுக்க டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) சென்றார். ஜம்பலபுரம் விலக்கு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் மோதி பசுமாடு பலி
திருமங்கலம்: பி.அம்மாபட்டி விவசாயி கந்தன் 65, மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று அம்மா பட்டியில் இருந்து உசிலம்பட்டி ரோட்டில் மாடுகளை ஓட்டிச் சென்றார். பன்னிக்குண்டு ஏரமலம்பட்டி பிரிவில் வந்த அரசு பஸ் மாட்டின் மீது மோதியது. இதில் மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மாட்டை ஓட்டி வந்த கந்தன் காயமடைந்தார். பஸ் டிரைவர் சாமிராஜிடம் சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆடுகள் மர்ம சாவு
பேரையூர்: மங்கல்ரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி 42. இவரது 6 ஆடுகள் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு வீட்டு அருகே உள்ள கொட்டகையில் தண்ணீர் குடித்தன. சிறிது நேரத்தில் இறந்தன. இதே ஊரைச் சேர்ந்த கந்தன் என்பவரின் இரண்டு ஆடுகளும் தண்ணீர் குடித்து இருந்தன. மர்மமான முறையில் இறந்த ஆடுகள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டை உடைத்து திருட்டு
திருமங்கலம்: மன்மதன் கோயில் தெருவை சேர்ந்த தனியார் நகைக்கடை ஊழியர் பிரபாகரன் 32, இவரது மனைவி தேன்மொழி 25, பேரையூர் தனியார் பள்ளி ஆசிரியர். நேற்று முன்தினம் இருவரும் வேலைக்கு சென்று வீடுதிரும்பினர். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் ரூ. 6 ஆயிரம், சிறு சிறு நகைகள், வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரிந்தது. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கள்ளிக்குடி தாலுகா சின்ன உலகாணியைச் சேர்ந்த பாக்கியம் மனைவி முத்துப்பேச்சி 40, நேற்று முன்தினம் மதியம் பஸ் ஸ்டாப் வரை சென்றவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோ திறந்து கிடந்துள்ளது. அதில் இருந்த 7.5 பவுன் நகைகள் திருடு போனது தெரிந்தது. கூட கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் தீ
மேலுார்: அழகர்கோவில் கோட்டைவாசல் ஜெயகணேஷ் 35, ராக்காயி அம்மன் கோயில் உதவி பூஜாரியாக பணிபுரிகிறார். நேற்று இரவு பூட்டி இருந்த இவரது வீட்டிலிருந்து மின் கசிவு காரணமாக தீ பற்றியது. மேலுார் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த அனைத்து பொருள்களும் தீக்கிரையாயின. மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்றவர் கைது
மேலுார்: மேலுார் எஸ்.ஐ., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் திருவாதவூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ரித்திஷ் குமாரை 25, கைது செய்து, 300 கிராம் கஞ்சா, டூவீலர், அலைபேசி, ரூ.1050ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில் மேலுார், துவரங்குளத்தில் உள்ள கிரானைட் பாலிஷ் தொழிற்சாலையில் வேலை செய்வதும், பீஹாரிலிருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரிய வந்தது.