
பூட்டை உடைத்து திருட்டு
திருமங்கலம்: தோப்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த தொழிலதிபர் சரவணன் 45, இவர் அக். 2 ல் குடும்பத்துடன் திருப்பதி சென்றார். நேற்று வீடு திரும்பிய அவர், முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், உள்ளே 4 அறைகளின் கதவுகளும் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதையும் அறிந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா பறிமுதல்: ஆறு பேர் கைது
திருமங்கலம்: மதுவிலக்கு போலீசார் சோழவந்தான் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டூவீலர்களில் வந்த திருப்பரங்குன்றம் சாக்கிலியப்பட்டி செல்லப்பாண்டி 32, உசிலம்பட்டி ஆனையூர் குமரேசன் 40, ஆனையூர் தீனதயாளன் 33, ஆகியோரை சோதனையிட்டனர். அவர்களது டூவீலரில் 4 கிலோ கஞ்சா கொண்டு சென்றது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் 2 டூவீலர்கள், 3 அலைபேசிகள், ரூ. 2 ஆயிரத்து 400 ஐ பணத்தையும் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
* திருநகர்: மதுரை திருநகர் போலீஸ் எஸ்.ஐ., குமாரி தலைமையில் தனக்கன்குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். நான்குவழிச்சாலை அருகே மூவரை சோதனையிட்டதில், அவர்கள் சிறிய சிறிய பொட்டலங்களாக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில் திருப்பரங்குன்றம் விக்னேஸ்வரன் 21, பரமக்குடி எமனேஸ்வரம் கரன் 22, திண்டுக்கல் ராஜாக்காபட்டி கார்த்திபன் 20, எனத் தெரிந்தது. மூவரும் தேனிமாவட்டம் போடி மெட்டு அருகே கஞ்சாவை வாங்கி மதுரை, திருநகர், ஹார்விப்பட்டி, தனக்கன்குளம் பகுதிகளில் விற்பனை செய்தது தெரிந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
* கொத்தனார் கொலை----------------: இருபெண்கள் கைது
திருமங்கலம்: உசிலம்பட்டி தாலுகா கண்ணனுாரைச் சேர்ந்த ராஜா 41, செக்கானுாரணியில் டீக்கடை தொழிலாளி. குட்லாடம்பட்டி அருகே பூச்சம்பட்டியை சேர்ந்த வள்ளி 40, சித்தாள் வேலை பார்த்து வந்தார். திருமணமான இவர்களின் குடும்பங்கள் சொந்த ஊரில் வசிக்கின்றன. இருவருக்கும் இடையே ஏற்பட்ட கள்ளத்தொடர்பால், செக்கானுாரணியில் வீடு எடுத்து ஒன்றரை ஆண்டுகளாக வசிக்கின்றனர். ராஜா இரவு நேரத்தில் டீக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார். வள்ளி தன்னோடு வேலை செய்யும் கீழப்பட்டியைச் சேர்ந்த கொத்தனார் செல்வம் 34, என்பவரோடு கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். கடந்த அக். 4 ல் வேலை முடிந்து வந்த ராஜா வீட்டிற்கு சென்றபோது, அங்கு செல்வம் இறந்து கிடந்துள்ளார். வள்ளியை காணவில்லை. செக்கானூரணி போலீசார் விசாரித்தனர். தலைமறைவான வள்ளியை பிடித்து விசாரித்தனர். குடும்பத்தை பிரிந்து ராஜாவோடு சேர்ந்து வாழ்ந்த வள்ளி, அதன்பின்பு செல்வத்தோடும் தொடர்பு வைத்துள்ளார். இவர்கள் தவிர வேறுபல ஆண்களோடும் அவருக்கு தொடர்பு இருந்துள்ளது. இதனைக் கொத்தனார் செல்வம் கண்டித்ததோடு, தன்னோடு மட்டுமே பழக வேண்டும் எனக் கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வள்ளி, தன்னோடு பழக்கத்தில் இருந்த சின்ன வாகைக்குளத்தைச் சேர்ந்த வளர்மதி 48, என்பவரோடு சேர்ந்து செல்வத்தை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இருவரையும் கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.