ரயிலில் பயணி மரணம்
மதுரை: சென்னை உயர்நீதி மன்றத்தில் மதுரையைச் சேர்ந்த சோமசுந்தரம் 48, பிரிவு அலுவலராக பணிபுரிந்தார். வார விடுமுறைக்காக குடும்பத்தினருடன் மதுரைக்கு அனந்தபுரி ரயிலில் வந்தார். அதிகாலை 3:30 மணியளவில் மதுரை வந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டது. ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதித்ததில் அவர் உயிரிழந்தது தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயிலில் படுக்கை விழுந்து சிறுவன் காயம்
மதுரை: நாகர்கோவில் - கோவை விரைவு ரயில் ஸ்லீப்பர் கோச்சில் நடு படுக்கை சரிந்ததில் கீழ்படுக்கையில் இருந்த 4 வயது சிறுவன் காயமடைந்தார். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது: வாஞ்சிமணியாச்சியில் ஏறிய சிறுவன் மீது, ரயில் கிளம்பிய சிறிது நேரத்தில் நடு படுக்கை சரிந்தது. படுக்கையின் பாதுகாப்புச் சங்கிலி சரியாகப் இணைக்கப்படாததே காரணம். அவருக்கு கோவில்பட்டி ஸ்டேஷனில் முதலுதவி அளிக்கப்பட்டது.
மேல் சிகிசைக்கு கோவில்பட்டி அல்லது விருதுநகரில் சேர்க்க, சிறுவனின் தாய் மறுத்துவிட்டார். எனவே மதுரை ஸ்டேஷனில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சிறுவனுடன் அவரது தாய் வெளியேறிவிட்டார். படுக்கையை ஆய்வு செய்ததில் தொழில்நுட்பக் கோளாறு எதுவும் இல்லை எனத் தெரிந்தது எனத் தெரிவித்தது.
----போலீசாருக்கு எஸ்.பி., பாராட்டு
பேரையூர்: தெற்கு தெரு சதுரகிரி மகன் வெங்கடேஷ் 34. வீட்டில் கஞ்சா விற்றதாக போலீசார் கைது செய்து 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்ட டி.எஸ்.பி துர்காதேவி, இன்ஸ்பெக்டர் பூமா, எஸ்.ஐ., சத்தியவேந்தன், போலீசார் சிலைராஜா, ஞானசேகரபாண்டியன் மகேஷ்குமார், சித்திக், பிரபுகுமார் ஆகியோரை எஸ்.பி அரவிந்த் பாராட்டினார்.
மதுபாட்டிலால் தாக்கியவர் கைது
வாடிப்பட்டி: சமயநல்லுார் பர்மா காலனி முருகேசன் 30, கொத்தனார். நேற்று முன்தினம் இரவு நான்கு வழிச்சாலை அருகே உள்ள பாரில் மது அருந்தினார். போதையில் அங்கு வந்த நண்பர் ஆட்டோ டிரைவர் ரூபன் 29, மது வாங்கி தரும்படி முருகேசனிடம் தகராறு செய்தார். பணம் இல்லை எனக்கூறி மறுத்த முருகேசனை, பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார். காயமடைந்த முருகேசன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ரூபனை போலீசார் கைது செய்தனர்.