பிளம்பர் பலி
மேலுார்: வெள்ளரிபட்டி அகிலன் 46, பிளம்பர். நேற்று காலை அதே பகுதியில் உள்ள நான்கு வழிச்சாலையில் இயற்கை உபாதைக்காக நடந்து சென்றார். அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். மேலுார் எஸ்.ஐ. ஆனந்தஜோதி விசாரிக்கிறார்.
மாணவர்கள் தற்கொலை
மதுரை: திருப்பரங்குன்றம் முத்து செல்வம் 17. நத்தம் தனியார் பொறியியல் கல்லுாரியில் படித்தார். உறவுக்கார பெண்ணிடம் அதிக நேரம் அலைபேசியில் பேசுவதை அவரது தந்தை அருள்மணி கண்டித்தார். மனமுடைந்த முத்து செல்வம் தற்கொலை செய்தார். குன்றத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
* விரகனுார் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நித்தியானந்தம் 19. மதுரையில் உள்ள தனியார் கல்லுாரி மாணவர். தினமும் அதிக நேரம் அலைபேசி பயன்படுத்தியதை அவரது தந்தை விஜயசுந்தர் கண்டித்தார். மனமுடைந்த நித்தியானந்தமும் தற்கொலை செய்து கொண்டார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
புகையிலை விற்றவர் கைது
மதுரை: ஆர்.ஆர். மண்டபம் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் 38. அதே பகுதியில் கடை வைத்திருந்தார். மதிச்சியம் எஸ்.ஐ., மாணிக்க வாசுகி ரோந்து பணியில் ஈடுபட்ட போது மகாதேவன் கடையில் திடீர் சோதனை நடத்தினார். பதுக்கி வைத்திருந்த தடைசெய்த 74 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டில் திருடியவர் கைது
அலங்காநல்லுார்: அச்சம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி. இருநாட்களுக்கு முன் இவருடைய வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் திருடு போனது. இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் விசாரித்தனர். அதே பகுதி விஜயை 26, கைது செய்து நகைகளை பறிமுதல் செய்தனர்.
லாரி மீது மோதி பலி
மதுரை: நாகமலை மேலத்தெருவை சேர்ந்தவர் கண்ணன் 30. திண்டுக்கல் 4 வழிச் சாலையில் டூவீலரில் சென்றார். தனக்கு முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால், பின்னால் சென்றவர் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். நாகமலை போலீசார் லாரி ஓட்டுநர் வேடசந்துார் பிரபாகரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அதிகாரி மனைவி மரணம்
மதுரை: சிலைமானை சேர்ந்தவர் ராமசாமி 54. கடலுாரில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் வளர்ச்சி அதிகாரியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி இந்திராணி 44. மனநலம் சரியில்லாத இவர் திடீர் உடல்நலக்குறைவால் இறந்தார்.