82 கிலோ குட்கா பறிமுதல்
மதுரை: விளாங்குடி பகுதியில் கார் ஒன்றை போலீசார் சோதனையிட்டனர். அதில் தடை செய்யப்பட்ட 82 கிலோ புகையிலை, கூல் லிப், குட்கா விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக வாகைகுளம் பாலமுருகன் 37, அருள்தாஸ்புரம் நாகேந்திரன் 38, தினேஷ்குமாரை 35, கைது செய்தனர்.
17 வயது மாணவி கர்ப்பம்கோயில் நிர்வாகி மீது புகார்
மதுரை: கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி, அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். நேற்றுமுன்தினம் கீழடி பகுதியில் வசிக்கும் உறவினர் வீட்டிற்கு சென்றபோது வயிற்று வலி ஏற்பட்டது. பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதித்த பெண் டாக்டர் பரிந்துரைபடி மதுரையில் ஸ்கேன் எடுத்தபோது 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்ததில், வீட்டருகே உள்ள தனியார் கோயில் நிர்வாகி ஒருவர்தான் காரணம் என மாணவி தெரிவித்தார்.
கோயிலுக்கு அப்பகுதி சிறுமிகளுடன் அடிக்கடி சென்றபோது நிர்வாகி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்தார். இதைதொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் மாணவி 'அட்மிட்' செய்யப்பட்டார். தல்லாகுளம் மகளிர் போலீசில் மாணவியின் தாயார் புகார் அளித்தார். கோயில் நிர்வாகியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோயிலுக்கு வரும் சிறுமிகளிடம் அவர் 'சில்மிஷத்தில்' ஈடுபட்டது தெரிந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
விபத்தில் இருவர் பலி
எழுமலை: டி.கிருஷ்ணாபுரத்தில் சிமென்ட் கடை வைத்திருந்தவர் குருசாமி 65. நேற்று டூவீலரில் எம்.கல்லுப்பட்டி சென்றார். இந்திரா காலனி அருகே டி.கிருஷ்ணாபுரம் ராமமூர்த்தி 35, ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் அதே இடத்தில் குருசாமி பலியானார். காயமடைந்த ராமமூர்த்தியும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். எம்.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
குண்டாசில் கைது
மதுரை: மதுரை வண்டியூர் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன் (எ) நரிக்குட்டி, 49; கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து கமிஷனர் லோகநாதன் உத்தரவில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.