
குற்றவாளி மீண்டும் கைது
சோழவந்தான்: கருப்பட்டி மணிமாறன் 28, இவர் 2021ல் சோழவந்தானில் இரவில் கடை வாசலில் துாங்கிய ஆதரவற்ற மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயற்சித்தார். மூச்சு திணறிய மூதாட்டி இறந்தார். இதில் சிறை சென்று 2022 மற்றும் 2023 நவம்பரில் வெளியே வரும்போதும் மூதாட்டிகளிடம் தவறாக நடக்க முயற்சித்து காயப்படுத்தி கைதானார்.
குண்டாஸ் வழக்கில் சிறை சென்றவர் கடந்த வாரம் வெளியே வந்தவர், மீண்டும் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை தாக்கி நகை, பணம் கேட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வரவே தப்பினார். அப்பகுதியில் இருந்த டூவீலரை திருடிச் சென்றார். சோழவந்தான் போலீசார் கைது செய்ய சென்றனர். தப்ப முயன்று கீழே விழுந்ததில் மணிமாறனுக்கு கை முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பின் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விஷம் குடித்த தொழிலாளி
திருப்பரங்குன்றம்: ரயில்வே ஸ்டேஷனில் நேற்று மாலை ஒருவர் விஷம் அருந்தி மயக்க நிலையில் கிடப்பதாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் வந்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிவிக்னேஷ், மருத்துவ உதவியாளர் அன்பு சந்திரன் அங்கு சென்றனர். விஷம் அருந்தி கிடந்தவரின் அருகில் வாகனம் செல்ல இயலாத நிலையில் வாகனத்தை ஒரு கி.மீ., முன்பு நிறுத்தி விட்டு மயங்கி கிடந்தவரை துாக்கி, முதலுதவி சிகிச்சை அளித்து திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரணையில், விஷம் அருந்தியவர் தேனி பாலா 45, என்பதும், இவர் சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்க்கும் அவர், 4 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்பதும் தெரிந்தது.
கால்வாயில் விழுந்து பலி
திருமங்கலம்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த செந்தில் 40, இவரது மனைவி ரம்யா 31, இவர்கள் கரும்பில் இருந்து சர்க்கரை, வெல்லம் தயாரிக்கும் பணி செய்கின்றனர். சிந்துபட்டி அருகே நாட்டாபட்டியில் கரும்பு ஆலை அமைத்து வெல்லம் காய்ச்சும் வேலையில் ஈடுபட்டனர்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்தபின் செந்தில் மது போதையில் ஊருக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை பார்த்த போது அந்தப் பகுதியில் உள்ள சிறிய வாய்க்காலில் தலை குப்புற கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூக்கில் சேறு, மற்றும் தண்ணீர் ஏறி மூச்சுத் திணறி இறந்தது தெரிந்தது. சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
---மூச்சுத்திணறி குழந்தை பலி
அலங்காநல்லுார்: பாலமேட்டை அடுத்த லிங்கவாடி ரஞ்சித் 31, கட்டட தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரிக்கு 25, நேற்று முன்தினம் அலங்காநல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலை பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும்போது புரையேறியதால் மூச்சுத்திணறிய குழந்தை இறந்தது. அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
---ரோட்டை கடக்க முயன்றவர் பலி
மதுரை: சாமநத்தம் அய்யனார்புரம் நீலமேகம் 41. இவர் பாண்டி கோயில் அருகே ரிங்ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பெரம்பலுாரை சேர்ந்த பாலமுருகன் 29, ஓட்டி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியது. முன்சக்கரத்தில் சிக்கிய நீலமேகம் பலியானார். அவரது சகோதரர் பஞ்சராஜா கொடுத்த புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
5வது முறையாக
முயன்று தற்கொலை
மதுரை: கூடல்புதுார் எஸ்.ஆலங்குளம் பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ஜோதிபாசு 47. மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது. சிகிச்சை பெற்று வந்தார். இதில் மனமுடைந்து நான்கு முறை தற்கொலைக்கு முயன்றார். அத்தனை முறையும் காப்பாற்றப்பட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தஅவர், பேனில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது தாயார் தனலட்சுமி புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் கம்பெனி மேலாளர் தற்கொலை
மதுரை: கோச்சடை மயில்வேல் நகர் மணிகண்டன் 35. தனியார் கார் பாடி பில்டிங் கம்பெனி மேலாளர். காதலித்து திருமணம் செய்தவர். குடும்ப பிரச்னையால் மனைவி, குழந்தையை பிரிந்திருந்தார். வீட்டில் தனியாக இருந்த போது மனமுடைந்து துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது மனைவி ரேவதி புகாரின்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற இருவர் கைது
மேலுார் : அரசு ஆண்கள் பள்ளி அருகே போலீஸ்காரர் தினேஷ் சென்ற போது கஞ்சா விற்ற கஸ்துாரிபாய் நகர் ஆகாஷ் 24, செட்டியார் தெரு சபரீஸ்வரன் 18, ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் 2 கிலோ கஞ்சா, ஒரு அலைபேசியை பறிமுதல் செய்தார். மேலும் இருவரை தேடி வருகிறார்.
நால்வர் கைது
மேலுார்: எஸ்.ஐ., ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மில்கேட் பகுதியில் ரோந்து சென்றனர். அவர்களைக் கண்டு ஓட்டம்பிடித்த இருவரை பிடித்து விசாரித்தனர். சென்னகரம்பட்டி பிரேம்குமார் 26, கஸ்துாரிபாய் நகர் விக்னேஷ் 20, என்பது தெரிந்தது. இருவரும் வாள் வைத்திருந்ததால் அவர்களை கைது செய்து வாள்களை பறிமுதல் செய்தனர்.
புகையிலை விற்ற இருவர் கைது
எஸ்.ஐ., ஜெயக்குமார் கட்டயம்பட்டி, சுண்ணாம்பூர் பகுதியில் ரோந்து சென்ற போது புகையிலை விற்ற கமர்தீன் 45, முத்துக்குமார் 53, ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் ஒரு கிலோ 170 கிராம் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தார்.
புகையிலை விற்பனை செய்த
10 பேர் கைது
மதுரையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகரில் பல்வேறு இடங்களில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கமிஷனர் லோகநாதன் உத்தரவின்பேரில் தல்லாகுளம், தெப்பக்குளம், திருநகர், ஜெய்ஹிந்த்புரம் ,செல்லுார், கே.புதுார், மதிச்சியம், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் தடையை மீறி விற்பனை செய்யப்பட்ட 246 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அவற்றை பறிமுதல் செய்து, விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.