மின்விசிறி விழுந்து சிறுவன் பலி
மதுரை: பழங்காநத்தம் முத்துக்குமார் மகன் அஸ்வந்த் 10. நர்சரி பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறையில் சிலைமான் சத்யாநகரில் உள்ள தாத்தா வீட்டிற்கு சென்றார். அங்கு படுத்துக்கொண்டு 'டிவி' பார்த்துக்கொண்டிருந்தபோது மேற்கூரையில் இருந்த பிளாஸ்டர் திடீரென இடிந்து, மின்விசிறி உடைந்து அஸ்வந்த் மேல் விழுந்தது. இதில் காயமுற்று அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அஸ்வந்த் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
செல்லுார் ராஜூ மீது வழக்கு
மதுரை: அண்ணா பல்கலை மாணவி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து செல்லுாரில் நேற்றுமுன்தினம் அ.தி.மு.க.,வினர் நகர் செயலாளர் செல்லுார் ராஜூ தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மொத்தம் 223 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். தடையை மீறியதாக செல்லுார் ராஜூ உட்பட 223 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்
திருமங்கலம்: சிவரக்கோட்டையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் உள்ளது. இதில் ராயபாளையம் ரமேஷ் 41, சிவரக்கோட்டை மகேஸ்வரன் 21, இரவு பணியில் இருந்தனர். அப்போது டூவீலரில் வந்த துாத்துக்குடி மாவட்டம் கந்தா என்ற தண்டபாணி 22, உட்பட 2 பேர் பெட்ரோல் நிரப்புமாறு கூறினர். அவர்கள் போதையில் இருந்ததால் ஊழியர்கள் மறுத்தனர். ஆத்திரமுற்ற அவர்கள் பீர்பாட்டில் மற்றும் இரும்பு ராடால் தாக்கினர். இவ்வழக்கில் தண்டபாணியை கள்ளிக்குடி போலீசார் கைது செய்தனர்.

