
கொலையில் ஒருவர் கைது
பெருங்குடி: மதுரை வலையன்குளம் வேல்முருகன் 26, கட்டட தொழிலாளி. நேற்று முன்தினம் அங்குள்ள மயானத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெருங்குடி போலீஸ் விசாரணையில், அதே பகுதி போஸ் மகன் மகேந்திரனுக்கும் 26, வேல்முருகனுக்கும் 6 மாதமாக தகராறு இருந்தது தெரிந்தது. சம்பவ நாளில் மகேந்திரனை வேல்முருகன் கிண்டல் செய்துள்ளார். ஆத்திரமடைந்த மகேந்திரன் கல்லால் தாக்கி கொலை செய்தார். அவரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர்.
கல்லுாரி மாணவர் பலி
வாடிப்பட்டி: ராஜபாளையம் செவல்பட்டி மணிகண்டன் மகன் விக்னேஷ் பாண்டி 22. சிவகங்கை மாவட்டம் தனியார் சட்டக் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவர். அதேபகுதி யுவராஜ் 19, ஸ்ரீவில்லிபுத்துார் கல்லுாரியில் 2ம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் இருவரும் டூவீலரில் கோவை சென்றனர். விக்னேஷ் பாண்டி ஓட்டினார். சமயநல்லுார் நான்குவழிச்சாலை ரயில்வே மேம்பால ஏற்றத்தில் சென்ற காய்கறி வேனின் பின்னால் மோதி விழுந்ததில் பலத்த காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று இறந்தார். விக்னேஷ் பாண்டி சிகிச்சையில் உள்ளார். சமயநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிணற்றில் விழுந்த சிறுவன் பலி
உசிலம்பட்டி: குப்பணம்பட்டி ராஜேந்திரன் மகன் தஷ்விக் 4. நேற்று முன்தினம் மாலை வீட்டுக்கு அருகே உள்ள 30 அடி ஆழ நீர்நிரம்பிய கிணற்றில் தவறி விழுந்தார். போலீசார், தீயணைப்பு, வீரர்கள் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி உடலை மீட்டனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

