
மாரடைப்பால் எஸ்.ஐ., மரணம்
பேரையூர்: தேனி மாவட்டம் போடிநாயக்கனுார் தாலுகா மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராஜு 59, பேரையூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஆக பணியாற்றினார். நேற்று இரவு பணியில் இருந்த போது நள்ளிரவு 12:00 மணிக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதை அடுத்து பேரையூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது மனைவி மகேஸ்வரி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக பணிபுரிகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
நகை பறித்தவர் போலீசில் ஒப்படைப்பு
உசிலம்பட்டி: பேரையூர் சின்னபூலாம்பட்டி ராஜேஸ்வரி 62. இவர் சோழவந்தானில் நகை வாங்கிக் கொண்டு உசிலம்பட்டிக்கு டவுன் பஸ்சில் ஏறி வந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் உசிலம்பட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே இறங்கினார். பின்னால் இருந்த சி.நடுப்பட்டி அழகர்சாமி 32, என்பவர் ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து தப்பி ஓடினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் தப்பி ஓடியவரை விரட்டிப் பிடித்தனர். அவரை பறித்துச் சென்ற செயினுடன், உசிலம்பட்டி நகர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா வைத்திருந்த இருவர் கைது
மதுரை: செல்லுார் எஸ்.ஐ., ராஜேஷ் தலைமையில் போலீசார் செல்லுார் 50 அடி ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அகிம்சாபுரம் ராஜபாண்டி, பீபீகுளம் பிரகாஷ்ராஜ் ஆகியோர் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் 350 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.
புகையிலை கடத்திய நால்வர் கைது
மதுரை: தெற்குவாசல் போலீசார் காஜா தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இருவர், அவர்களை பின்தொடர்ந்து வந்த வேனை மடக்கி சோதனையிட்டனர். வேனில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் இருந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து கோவில்பாப்பாகுடி பாலமுருகன் 22, நாகேந்திரன் 21, திடீர்நகர் கார்த்திகேயன் 24, வண்டியூர் உமர் சுதிர் அகமது ஆகியோரை கைது செய்தனர். எஸ்.ஐ., கோடீஸ்வரமருது விசாரித்து வருகிறார்.