
வாகனம் மோதி ஒருவர் வலி
திருமங்கலம்: மேலக்கோட்டை பாரதிநகர் சிவசாமி 72, அந்த பகுதியில் உள்ள பட்டாசு கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பினார். திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது திருமங்கலத்தில் இருந்து சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
கண்மாயில் மூழ்கி பலி
திருமங்கலம்: மீனாட்சி அம்மன் கோவில் அருகேயுள்ள நந்தி தெரு ரகுநாதன் 32, தனியார் அலைபேசி நெட்வொர்க் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது நண்பர் ஒருவர் புதிதாக டூவீலர் வாங்கியதால் விருந்து கொடுத்துள்ளார். இதில் பங்கேற்க நேற்று முன்தினம் ரகுநாதன் உள்ளிட்ட 4 பேர் திருமங்கலம் காமாட்சிபுரத்திற்கு சென்றனர். அங்குள்ள கண்மாயில் குளித்த போது தண்ணீருக்குள் சென்ற ரகுநாதன் நீண்ட நேரமாக வெளியில் வரவில்லை.
திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியும் கிடைக்கவில்லை. மதுரையில் இருந்து பைபர் படகு வரவழைக்கப்பட்டு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை 1: 30 மணிக்கு ரகுநாதன் சடலமாக மீட்கப்பட்டார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
டிரைவருக்கு அரிவாள் வெட்டு
கொட்டாம்பட்டி: கம்பூர் சாகுல் ஹமீது 23, சவரப்பட்டியில் தனியார் நிறுவன டிரைவர். ஏற்கனவே முன்பு அவர் ஒரு மினரல் வாட்டர் நிறுவனத்தில் பணியாற்றிய போது குன்னங்குடி பட்டி சகோதரர்கள் கவியரசன், நிஜிந்திரனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து டூவீலரில் ஊருக்கு திரும்பியவரை, குன்னங்குடிபட்டி விலக்கருகே சகோதரர்கள் இருவரும் வழிமறித்து அரிவாளால் தாக்கினர். காயமடைந்த சாகுல் ஹமீது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொட்டாம்பட்டி எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் விசாரிக்கிறார்.
இருவர் கைது
கொட்டாம்பட்டி: எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் காடாம்பட்டி பகுதியில் ரோந்து சென்ற போது அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய கருங்காலக்குடி நந்தகுமார் 25, டிரைவர் மாதவன் 24, உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். லாரி மற்றும் மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தார்.
அலைபேசி திருடர்கள் கைது
மதுரை: ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம்கமுதியை சேர்ந்த கார்த்திக்குமார் 20, மணிகண்டன் 22, ஆகியோர் நீண்ட நேரம் சந்தேகப்படும் படி நின்றிருந்தனர்.ரோந்து சென்றரயில்வே போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போலீசார், அவர்களிடம் இருந்து சிம்கார்டு இல்லாத 2 அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.

