
கஞ்சா கடத்திய இருவர் கைது
உசிலம்பட்டி: எஸ்.பி., தனிப்படை போலீசார் போதைப்பொருள் தடுப்பு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். தேனி ரோட்டில் நகராட்சி குப்பைக் கிடங்கு பகுதியில் வந்த காரை சோதனையிட்டதில் 22 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. காரில் வந்த கீரிபட்டி தங்கப்பாண்டி 38, வில்லாணி ராமர் 40, இருவரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார், டூவீலர், 2 மொபைல் போன்கள், ரூ.1.5 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய லிங்கப்பநாயக்கனுார் செல்வம், அஜித், தேனி மாவட்டம் கூடலுார் அன்பழகன் ஆகியோரை தேடிவருகின்றனர்.
ஒருவர் பலி
மேலுார்: புரண்டிபட்டியைச் சேர்ந்தவர் கார்த்திக் 35, கூலித் தொழிலாளி. நேற்று காலை மேலுாரில் இருந்து சொந்த ஊருக்கு டூ வீலரில் சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. சத்தியபுரம் அருகே நிலை தடுமாறி ரோட்டோர தடுப்பில் மோதியதில் இறந்தார். எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.
சிறுவன் உடல் மீட்பு
உசிலம்பட்டி: பூச்சிபட்டி தச்சுத்தொழிலாளி கண்ணன் 30. நேற்று முன்தினம் இவரது தங்கை மகன் திலிப் பாண்டி 9, நீச்சல் பழகுவதற்காக அருகே உள்ள கிணற்றுக்கு சென்றனர். எதிர்பாராத விதமாக இருவரும் கிணற்றில் மூழ்கி இறந்தனர். இரவில் கண்ணனின் பிரேதத்தை போலீசார் மீட்டனர். நேற்று காலை 7:00 மணிக்கு சிறுவனின் பிரேதத்தை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை
மேலுார்: வெள்ளரிப்பட்டி தனியார் தொழிற்சாலையில் அசாம் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 40 பேர் இரண்டு அறைகளில் தங்கி பணிபுரிகின்றனர். இரு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்குள் ஆங்கில புத்தாண்டை கொண்டாடியதில் அடிதடி ஏற்பட்டு விரோதம் உருவானது. இந்நிலையில் மற்றவர்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த தேபாரு 27, தங்கியிருந்தார். பக்கத்து அறையில் ஒடிசா மாநில சகோதரர்கள் பாலகிருஷ்ணா காதர்கா 32, தபாஸ் காதர்கா 30, தங்கி இருந்தனர். இவர்கள் இருவரும் தேபாருவை கம்பியால் தாக்கியதில் இறந்தார். எஸ்.ஐ., ரமேஷ்பாபு விசாரிக்கிறார்.