வி.ஏ.ஓ.,வுக்கு மிரட்டல்
திருமங்கலம்: திருப்பரங்குன்றம் தாலுகா நெடுமதுரை வி.ஏ.ஓ., முருகாண்டி. இவருக்கு நேற்று முன்தினம் மாலை வாட்ஸ் அப் மூலம் மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வலியுறுத்தி கூடக்கோவில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.
அனுமதியின்றி பட்டாசு; ஒருவர் கைது
பேரையூர்: வி.சத்திரப்பட்டி முருகதாஸ் 58. அப்பகுதியிலுள்ள ஒரு விவசாய தோட்டத்தில் 50 சென்ட் நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பாழடைந்த கட்டடம் உள்ளது. இக்கட்டடத்திற்குள் அரசு அனுமதி இன்றி முருகதாஸ் பட்டாசு தயாரிப்பதற்கான கரி மருந்து, பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இதுகுறித்து வி.ஏ.ஓ., முரளி போலீசாரிடம் புகார் அளித்தார். முருகதாஸை போலீசார் கைது செய்தனர். பட்டாசு, கரி மருந்து பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
விபத்தில் எலக்ட்ரீசியன் பலி
திருமங்கலம்: மதுரை தத்தனேரி எலக்ட்ரீசியன் கந்தசாமி 49. இவர் வேலைக்காக மதுரையில் இருந்து விருதுநகருக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) சென்றார். கள்ளிக்குடி தனியார் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது வலது பக்கம் திரும்ப வந்த நேசனேரி கோபால் ஓட்டிய மினி வேன் டூவீலர் மீது உரசியது. நிலை தடுமாறிய டூவீலர் வளைவில் நின்ற கார் மீது மோதியது. இதில் காயம் அடைந்த கந்தசாமிமதுரை அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். கள்ளிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.