
போலீஸ் அறிவிப்பு
மதுரை: மாவட்ட எஸ்.பி. அரவிந்த் அறிக்கை: லோக்சபா தேர்தல் சம்பந்தமான தவறான தகவல்களை குறுஞ்செய்திகள், சமூக ஊடகங்கள் வழியாக பகிர்பவர்கள் குறித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் மதுரை மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கி வரும்  போலீஸ்  கட்டுப்பாட்டு அறை அலைபேசி   94981-01395 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நுாதன ஏ.டி.எம்., திருடன் கைது
மேலுார்: வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த செல்லம்மாள் 78, ஓய்வு பெற்ற செவிலியர். மார்ச் 4 ல் ஸ்டேட் வங்கி முன்புள்ள ஏடி.எம்,,மில் பணம் எடுக்க சென்றார். அங்கிருந்த ஒருவர் எடுத்துத் தருவதாக கூறி ஏ.டி.எம்., கார்டை வாங்கினார். அவரால் பணம் எடுக்க முடியவில்லை எனக்கூறி,  ஏ.டி.எம்., கார்டை திருப்பிக் கொடுத்தார். இந்நிலையில் ரூ 2 லட்சத்து 66 ஆயிரத்து 885 ரூபாய் எடுத்ததாக குறுஞ்செய்தி செல்லம்மாள் அலைபேசியில் தகவல் வந்தது. இதன்பின்பே அந்த நபர் கார்டை மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. அவரது புகாரில் இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு, எஸ்.ஐ.க்கள் ரமேஷ்பாபு பழனியப்பன், தனிப்பிரிவு எஸ்.ஐ. முத்துக்குமார், போலீசார் தினேஷ் ஆகியோர் போடியைச் சேர்ந்த அழகுராஜாவை 42, கைது செய்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
கஞ்சா  விற்றவர் கைது
பேரையூர்: உசிலம்பட்டி தாலுகா கணவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் செங்குட்டுவன் 29. பேரையூர் தாலுகா பெரியகட்டளையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். ரோந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து 1.5 கிலோ கஞ்சாவையும் அவர் வைத்திருந்த ரூ. 8500 ஐயும் பறிமுதல் செய்தனர்.
மாணவி தற்கொலை
மதுரை: விரகனுார் மகாராஜன் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் ஹர்ஷினி 26. கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்தார். போட்டித் தேர்வுகளை எழுதி வந்தார். கடைசியாக எழுதிய தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாததால் மனமுடைந்தவர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிலைமான் போலீசார் விசாரிக்கின்றனர்.
போதை மாத்திரை விற்றவர் கைது
மதுரை: செல்லுார் நந்தவனம் பகுதியில் ஒரு வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்.ஐ., ரஞ்சித் தலைமையில் சோதனை நடத்தினர். அப்போது சூர்யா 21, என்பவர் வீட்டில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கிருந்த 900 மாத்திரைகள், பைக், அலைபேசியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தப்பியோடிய பழங்காநத்தம் முத்தையாவை தேடி வருகின்றனர்.
ஓய்வு வீரரிடம் ரூ.12 லட்சம் மோசடி
மதுரை: மணிநகரம் கணேசன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். பெங்களூருவை சேர்ந்தவர்கள் சண்முகம், அவரது மகன் சுனில்குமார், மகள் சங்கீதா, மருமகன் சதீஷ்காந்தி. இவர்கள், கணேசன் மகளுக்கு பெங்களூருவில் மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் வாங்கியுள்ளனர். போலி நியமன உத்தரவை வழங்கி மோசடி செய்தனர். நீதிமன்றம் உத்தரவின்பேரில் கணேசன் உட்பட 4 பேர் மீதும் திலகர்திடல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

