ADDED : மார் 17, 2025 05:47 AM

8 கிலோ கஞ்சா பறிமுதல்
மதுரை: மேற்குவங்க மாநிலம் புருலி யாவில் இருந்து மதுரை வழியாக திருநெல்வேலி செல்லும் ரயிலில் கஞ்சா கடத்துவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சிறப்பு எஸ்.ஐ., முத்துப்பால் தலைமையில்போலீசார் திண்டுக்கல்லில் ஏறி மதுரை வரை சோதனை செய்தனர்.
மேற்குவங்கம் பிஷ்னுபூரில் இருந்து விருதுநகர் வரை டிக்கெட் இன்றிபயணித்த திருநெல்வேலி மாவட்டம் இந்திரா நகர் அஜித் குமார் 30, மேல பாலமடை டேவிட் ராஜா 20, கங்கைகொண்டானைச் சேர்ந்த 17 வயது நபரை சோதனையிட்டு, 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சகுந்தலா விசாரிக்கிறார்.
காத்திருப்போர் அறையில் திருட்டு
மதுரை: பெருங்குடி வினோதினி 33,சிவகாசியில் இருந்து வந்த உறவினரை பார்க்க மதுரை ரயில்வே ஸ்டேஷன் வந்தார். ரயில் வர தாமதமானதால் முதல் பிளாட்பாரத்தில் காத்திருப்போர் அறையில் தங்கினார். குழந்தைகள் விளையாடியதை கண்காணித்த வேளையில் கொண்டு வந்த தனது பையை தவறவிட்டார்.
கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த ரயில்வே போலீசார் தேனி மாவட்டம் வருஷநாடு சுரேஷ் 39, என்பவரை கைது செய்து பையை மீட்டனர்.
சிறையில் சோதனை
மதுரை: மத்திய சிறையில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் காலை 8:30 மணி வரை சிறை போலீஸ், போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் சிறை டி.ஐ. ஜி., முருகேசன், கண்காணிப்பாளர் சதீஷ்குமார், போலீஸ் துணை கமிஷனர் இனிக்கோ திவ்யன் ஆகியோரும் ஈடுபட்டனர். மூன்றரை மணி நேரம் நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
முதியவர் கொலை ஒருவர் கைது
திருப்பரங்குன்றம்: மதுரை முத்துப்பட்டியைச் சேர்ந்தவர் காயாம்பு 75. சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் யாசகம் பெற்று சரவணப் பொய்கை அருகில் தங்கினார்.
சிவகங்கையைச் சேர்ந்த சங்கரலிங்கம் 50, என்பவரும் திருப்பரங்குன்றத்தில் கூலி வேலை பார்த்துக் கொண்டு சரவணப் பொய் பகுதியில் தங்கி உள்ளார். இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு சரவணப் பொய்கையில் தகராறு ஏற்பட்டது.
இதில் சங்கரலிங்கம் அடித்து தள்ளிவிட்டதில் காயாம்பு காயமடைந்தார். தலையில் காயமடைந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் சங்கரலிங்கத்தை கைது செய்தனர்.