லாரி -- பஸ் மோதல்: தொழிலாளி பலி
திருமங்கலம்: ஒடிசா மாநில கட்டட தொழிலாளி சுகுமார் டாக்கஸ் 38. சில நாட்களாக டி.புதுப்பட்டி குன்னத்துாரில் கட்டட வேலை செய்தார். நேற்று முன்தினம் மதியம் திருமங்கலத்தில் இருந்து குன்னத்துாருக்கு டூவீலரில் சென்றார். ஆலம்பட்டி அருகே டேங்கர் லாரியை முந்த முயன்ற போது டூவீலர் மீது உரசியது. நிலைத் தடுமாறிய டூவீலர் செங்கப்படை - திருமங்கலம் பஸ் மீது மோதியது. இதில் சுகுமார் டாக்கஸ் இறந்தார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்
பேரையூர்: எஸ்.கீழப்பட்டி கவுரி மலை அடிவாரத்தில் மணல் திருடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எஸ். ஐ., சந்தோஷ்குமார் தலைமையிலான போலீசார் மணல் திருடிய விருதுநகர் மாவட்டம் அழகாபுரி முனியப்பன் 38, எஸ். கீழப்பட்டி விக்னேஷை 20, கைது செய்து டிப்பர் லாரி, டூவீலர், மண் அள்ளும் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
ஆடு திருட முயன்ற 4 பேர் கைது
கள்ளிக்குடி: சிவரக்கோட்டை சுப்பிரமணியன் ஆடு மேய்க்கும் தொழில் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதி செல்வம், சுப்பிரமணியன் ஆட்டு தொழுவம் வெளியில் துாங்கிக்கொண்டிருந்த போது, ஆடுகள் சத்தமிட்டன. தொழுவத்திற்குள் சென்று பார்த்தபோது 4 பேர் ஆடுகளை திருட முயன்றனர். தடுத்தபோது கற்களை வீசிவிட்டு தப்பினர். அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், கொடிசெல்வம், ஜெயசிம்மன், ராகுல் ஆகியோரை கள்ளிக்குடி போலீசார் கைது செய்தனர்.
காளை முட்டியதில் பலி
கொட்டாம்பட்டி: பள்ளபட்டி அசாருதீன் 25. கருங்காலக்குடி பகுதியில் நடந்த வடமாடு மஞ்சுவிரட்டை பார்த்தபோது காளை முட்டியதில் இறந்தார். எஸ்.ஐ., கவிதா, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.
'தீபாவளி' பலி
அலங்காநல்லுார்: பி.மேட்டுப்பட்டி தீபாவளி 42. கூலித் தொழிலாளி. நேற்று மாலை வலசை பகுதி பெரியாறு பாசன கால்வாயில் குளித்த போது தவறி விழுந்து இறந்தார். பெரியாற்று கால்வாய் அருகே உடல் மீட்கப்பட்டது. இவருக்கு மனைவி கவிதா, 16, 13 வயதில் மகன்கள் உள்ளனர் அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.