ADDED : ஜூலை 31, 2025 03:42 AM

லாரி மோதி ஆசிரியை பலி மதுரை: வண்டியூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி அம்பிகா 45. தனியார் பள்ளி ஆசிரியை. நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு டூவீலரில் சென்றார். ஹெல்மெட் அணிந்திருந்தார். கருப்பாயூரணியில் வளைவான ரோட்டில் சென்றபோது, டூவீலரை முந்திச்சென்ற லாரி உரசியதில் அம்பிகா தடுமாறி விழுந்தார். லாரி சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி பலியானார். கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.
திருட திட்டமிட்ட 6 பேர் கைது வாடிப்பட்டி: சமயநல்லுார் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் எஸ்.ஐ.,ரமேஷ் மறறும் போலீசார் ரோந்து சென்றனர். ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் கும்பலாக அமர்ந்து சமயநல்லுார், பரவை உள்ளிட்ட பகுதி வீடுகளில் திருடுவது, பெண்களிடம் நகை பறிப்பு வழிப்பறி செய்ய திட்டமிட்ட தேனுார் சந்தை தெரு பிரபு 32, தோடனேரி ஜெயசூர்யா 26, விஷ்ணு 23, ரூபன் 20, தாராப்பட்டி லோகு 26, காந்தி நகர் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து கத்தி, வாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தப்பியவர்களை தேடி வருகின்றனர்.
கணவர் கொலை: மனைவி கைது திருமங்கலம்: திரளி ஆட்டோ டிரைவர் பாண்டியராஜன் 40. இவரது மனைவி பூங்கொடி 36. இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். ஜூலை 15 இரவில் வீட்டு வாசலில் படுத்திருந்த பாண்டியராஜன் வெட்டப்பட்டு மயங்கி கிடந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஜூலை 16ல் இறந்தார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மனைவி பூங்கொடியிடம் போலீசார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகத்தின்பேரில் கைது செய்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மூவருக்கு குண்டாஸ் மேலுார்: அ.வல்லாளபட்டியை சேர்ந்த 19 வயது பெண்ணுடன் அதை ஊரைச் சேர்ந்த தீபன் ராஜூக்கு 25, பழக்கம் ஏற்பட்டது. ஜூலை 2ல் இருவரும் தனிமையில் இருந்த போது தீபன் ராஜின் நண்பர்கள் மதன் 25, திருமாறன் 24, வரவே மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
மேலுார் மகளிர் இன்ஸ்பெக்டர் காஞ்சனாதேவி கைது செய்தார். மூவரையும் எஸ்.பி., அரவிந்த் பரிந்துரையில் கலெக்டர் பிரவீன் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

