
மாணவர் பலி உசிலம்பட்டி: கள்ளபட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி 19. அருகேயுள்ள முத்தையம்பட்டியைச் சேர்ந்தவர் சிவனேஷ் 19. இருவரும் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி பி.ஏ., பொருளாதாரம் 2 ம் ஆண்டு மாணவர்கள். நேற்று இருவரும் கல்லுாரிக்கு டூவீலரில் காலை 10:00 மணிக்கு வந்தனர். கல்லுாரி முன்பு, மதுரையில் இருந்து வந்த தனியார் பஸ் மோதியதில் பின்னால் அமர்ந்திருந்த ஜெயபாண்டி பலியானார். காயமடைந்த சிவனேஷ் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் மாணவிகள் காயம் எழுமலை: எம்.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பதிவுக்காக ஆதார் அட்டையுடன் வரும்படி தெரிவித்து இருந்தனர். நேற்று டி.பாறைப்பட்டி, உலைப்பட்டி மாணவியர் மூவர், ஆதார் அட்டையுடன் வரவில்லை. அதனை எடுத்து வருவதற்காக பாலமுருகனுடன் டூவீலரில் மூவரும் வீட்டுக்குச் சென்றனர்.
வழியில் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது டூவீலர் தடுமாறி விழுந்ததில் நால்வரும் காயமடைந்தனர். உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாணவி ஒருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர்களுக்கு அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆறுதல் கூறினார். எம்.கல்லுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் தம்பதி பலி கொட்டாம்பட்டி : சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி விவசாயி முருகேசன் 50. இவரது மனைவி ராதா 46, நேற்று முன்தினம் இரவு இருவரும் மனக்கட்டு கிராமத்தில் முருகேசன் உறவினரின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று, சொந்த ஊருக்கு திரும்பினர். மனப்பச்சேரி அருகே எதிரே வந்த கார் மோதி இருவரும் இறந்தனர். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, போலீசார் தெய்வேந்திரன் விசாரிக்கின்றனர்.
மூதாட்டி பலி சோழவந்தான்: சங்கங்கோட்டையைச் சேர்ந்த ஜெயபாலன் மனைவி செருவம்மாள் 68. தனது தம்பி சங்கிலியின் வயலில் அறுவடைப் பணியில் இருந்தார். அப்போது கதிர் அறுக்கும் இயந்திரத்தின் பின்பக்கம் நின்றிருந்தபோது இயந்திரம் மோதி பலியானார்.
ரயில் மோதி ஒருவர் பலி திருமங்கலம்: மதுரை கோரிப்பாளையம் ஜாகிர் உசேன் 26. திருமங்கலத்திற்கு உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று காலை பாண்டியன் நகர் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது மும்பை - நாகர்கோவில் ரயில் மோதி இறந்தார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.