ADDED : அக் 06, 2025 04:32 AM
முன்னாள் கவுன்சிலர் மீது வழக்கு
மதுரை: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஜெமிலா 60. இவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, யாகப்பா நகரில் உள்ள அவரது சகோதரர் வீட்டிற்கு ஆட்டோவில் சென்றார். அவருடன் அவரது பேரன்கள் 2 பேர் சென்றனர். சகோதரர் வீடு முன் ஆட்டோவில் அமர்ந்திருந்த போது அப்பகுதியில் இருந்த பழமையான 3 மாடி கட்டடம் இடிந்து ஆட்டோ மீது விழுந்ததில் ஜெமிலா உயிரிழந்தார். பேரன்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக வீட்டின் உரிமையாளர் முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் சுசீந்திரன் மீது 3 பிரிவுகளில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
போதையில் தீக்குளிப்பு
மதுரை: சாத்தமங்கலம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 25. பெயின்டர். இவர் அப்பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்ததாக தெரிகிறது. அதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சம்பவத்தன்று குடிபோதையில், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், நேற்று உயிரிழந்தார். அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
ஒருவர் பலி
பேரையூர்: பாப்பையாபுரம் சுந்தரம் மகன் செல்லப்பாண்டி 24. இவர் பேரையூரில் வெல்டிங் கடையில் வேலை செய்து வந்தார். வேலை முடித்து பேரையூரில் இருந்து டூவீலரில் சிலமலைப்பட்டி அருகே சென்றபோது நாய் குறுக்கிட்டது. நிலைதடுமாறி கீழே விழுந்து இறந்தார். எஸ்.ஐ சந்தோஷ்குமார் விசாரிக்கிறார்.