நாய்க்கடி: உரிமையாளர் மீது வழக்கு
மதுரை: புதுஜெயில் ரோடு மில்காலனி ஷ்யாம் சுந்தர்,- நேசலட்சுமி தம்பதியின் 12 வயது மகள் நேற்றுமுன்தினம் கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்துவந்துள்ளார். அப்போது லேபர் லைன் பகுதியில் விஜய்சாரதி என்பவரது வீட்டில் இருந்த லேப்ரடார் வகை நாய் கடித்ததில் காலில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நேசலட்சுமிக்கும், விஜய்சாரதிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. நேசலட்சுமி புகாரில் விஜய்சாரதி, உறவினர் சத்யா மீது கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மருத்துவமனையில் விழுந்து பலி
மதுரை: அரசு மருத்துவமனையில் ஜெய்ஹிந்த்புரம் சீனிவாசமூர்த்தி, கீதா தம்பதியின் 6 வயது குழந்தை சிறுநீர் சிகிச்சைக்காக வார்டு எண் 43ல் நவ. 7ல் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடனிருந்த கீதா, நேற்றுமுன்தினம் மகனின் கட்டிலில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
புத்தக கடையில் பணம் திருட்டு
மதுரை: மீனாட்சி அம்மன் கோயில் அருகே உள்ள எழுகடல் தெருவில் புத்தக கடை நடத்துபவர் சிவசுப்பிரமணியன். நேற்று முன்தினம் வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை வந்தபோது, கடையின் இரும்பு ஷட்டரை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ. 24 ஆயிரத்து 800ஐ திருடியது தெரிந்தது. கடையின் வேறு ஒரு பகுதியில் வைக்கப்பட்டிருந்த ரூ. 4.23 லட்சம் தப்பியது. போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுவன் பலி
மதுரை: மதுரை சிந்தாமணி போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சங்கர் பாண்டி, 11. அனுப்பானடி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை சங்கர் பாண்டி சிந்தாமணி போலீஸ் சோதனை சாவடி பகுதியில் ரோட்டை கடக்க முயன்றார். எதிரே வந்த லாரி மோதியதில் டயரில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.
கொலை வழக்கில் இருவர் கைது
மேலூர்: நொண்டிகோவில்பட்டி கட்டட தொழிலாளி மணிமாறன். நேற்று முன்தினம் இரவு செங்கலால் அடித்து கொல்லப்பட்டார். இவ் வழக்கில் அட்டப்பட்டி ரமேஷ் 23, மேலூர், முகமதியாபுரம் முகமது யாசின் 23, உள்ளிட்ட இருவரை கைது செய்தனர். விசாரணையில் மதுபோதையில் நண்பர்கள் மூவருக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

