
கபடி வீரர் கொலை
மேலுார் : வெள்ளரிப்பட்டி மருதுபாண்டி 22, கபடி வீரரான இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்தார். நவ.25 ல் வெளிநாடு செல்ல இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெள்ளரிப்பட்டி - மருதுார் ரோட்டோர பள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். போலீஸ் விசாரணையில் இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்த கபடி போட்டியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதுகின்றனர். மேலுார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி விசாரிக்கிறார்.
சிறுமி பலி
மேலுார்: வடக்கு வலையபட்டி பூவலிங்கம் சினேகா, இவர்களது மகள் பூவரசி 3, நேற்று காலை ரோட்டோரம் வீட்டின் முன் நிறுத்தியிருந்த டூவீலர் மீது குழந்தை உட்கார்ந்து இருந்தார். அவ்வழியே வடக்கு வலையபட்டி சென்ற அரசு பஸ் டூவீலர் மீது மோதியது. இதில் குழந்தை தவறி பஸ்சின் முன்பு விழுந்ததில், நசுங்கி இறந்தார். கீழவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.
குளிக்க சென்றவர் பலி
மேலுார் : சந்தைப்பேட்டையைச் சேர்ந்தவர் அப்துல் காதர் 65, நேற்று காலை பட்டாளம் கண்மாய் பகுதியில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி இறந்தார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் நகை பறிப்பு
திருப்பரங்குன்றம்: பசுமலை மூட்டா காலனி பாரதிதாசன் மனைவி பத்மாவதி 58. இவர் நேற்று திருமண வீட்டுக்குச் சென்று மதியம் வீடு திரும்பினார். டூவீலரில் ஹெல்மெட் அணிந்திருந்த 2 பேர் பத்மாவதியின் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை பறித்தனர். அவர் கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றதும், இருவரும் தப்பினர். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
டூவீலரில் சென்ற டிரைவர் பலி
பேரையூர்: சந்தையூரைச் சேர்ந்தவர் சங்கர்குமார் 35. இவர் அரசு போக்குவரத்துக் கழக புதுக்குளம் கிளையில் டிரைவராக பணிபுரிந்தார். இரு நாட்களுக்கு முன்பு இரவு பேரையூரில் இருந்து சந்தையூருக்கு டூவீலரில் சென்றார்,. எஸ் பாறைப்பட்டி விலக்கு அருகே காட்டுப்பன்றி குறுக்கிட்டது. பன்றி மீது மோதியதில் டூவீலர் மீது கீழே விழுந்ததால் காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

