ADDED : பிப் 05, 2026 05:21 AM
விபத்தில் வெல்டர் பலி
வாடிப்பட்டி: சமயநல்லுார் பாப்பாத்தி அம்மன் கோயில் தெரு ஸ்டாலின் 37, மதுரையில் இன்ஜினியரிங் ஒர்க் ஷாப்பில் வெல்டர் வேலை பார்த்தார். நேற்று முன்தினம் இரவு ஸ்டாலின் தனது நண்பர் இருளப்பனுடன் டூவீலரில் வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் உறவினரை பார்த்து திரும்பினார். அதிகாலை 1:00 மணிக்கு டபேதார் சந்தை அருகே பெட்ரோல் தீர்ந்ததால் டூவீலர் நின்றது. டூவீலரை நிறுத்திவிட்டு பெட்ரோல் வாங்க எதிர் திசையில் உள்ள பங்கிற்கு சாலையை கடந்தார். அதேநேரம் சிவகாசியில் இருந்து கரூர் சென்ற வேன் மோதி இறந்தார். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. போலீசார் விசாரிக்கின்றனர்.
மாணவர் பலி
கொட்டாம்பட்டி: அலங்கம்பட்டி சித்ரா -நாகராஜ் தம்பதியின் 2 வது மகன் லிங்கேஸ்வரன் 11, கம்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் அதே ஊரில் சூழப்பிடாரி கோயில் அன்னதான விழாவுக்கு அண்ணன் தருண்ராஜ் அழைக்கவே லிங்கேஸ்வரன் மறுத்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. லிங்கேஸ்வரன் ஓட்டு வீட்டில் துாக்கிட்டார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
நகை திருட்டு
அப்பன்திருப்பதி: கண்ணனேந்தல் மகாலட்சுமி நகர் கோதையம்மாள். நேற்று சோலைமலை முருகன் கோயிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்ப பஸ் ஏறியபோது, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் செயின் திருடு போனது தெரிந்தது. அப்பன்திருப்பதி போலீசார் விசாரிக்கின்றனர்.
கோடவுனில் தீ
புதுார்: மதுரை கோசாகுளம் கவுஸ், 46. புதுார் சிட்கோ காலனியில் கோடவுன் ஒன்றில் செருப்பு தயாரிக்கும் பொருட்களை இறக்குமதி செய்யும் தொழில் செய்தார். நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு கோடவுனில் இருந்து புகை வந்தது. தென்மண்டல துணை இயக்குநர் ராஜேஷ் குமார் தலைமையில் தல்லாகுளம், அனுப்பானடி, நகர் தீயணைப்பு வீரர்கள் கோடவுனில் பரவிய தீயை 3 மணி நேரம் போராடி அணைத்தனர். இவ்விபத்தில் செருப்பு தயாரிக்கும் மூலதன பொருட்கள் எரிந்தன. புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
