UPDATED : ஜூன் 11, 2026 09:37 PM
ADDED : ஜூன் 11, 2026 09:20 PM
பெருங்குடி: மதுரை வலையப்பட்டி சின்னக்கருப்பு மகன் அம்சகொடி 38. இவர் அதே பகுதி கார்த்திக்ராஜாவிடம் ஜல்லிக்கட்டு காளை வாங்கி தருவதாக பணம் பெற்றுள்ளார். காளையையும் கொடுக்கவில்லை. ஆறு ஆண்டுகளாக பணத்தையும் திரும்ப கொடுக்காததால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டு முன்விரதம் உருவானது.
திருப்பூரில் வேலை செய்த அம்சகொடி சில நாட்களுக்குமுன் மதுரை வந்தார். அவரிடம் கார்த்திக்ராஜா, அவரது நண்பர்கள் பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கியதில் அம்சகொடி சம்பவ இடத்திலேயே இறந்தார். இது தொடர்பாக கார்த்திக்ராஜா, நண்பர்கள் நந்து, மணிகண்டன், விஜய், நாகேந்திரன் ஆகியோரை பெருங்குடி போலீசார் கைது செய்தனர்.
--
* அரசு டிரைவரை வெட்டியவர் கைது
சோழவந்தான்: கருப்பட்டியை சேர்ந்தவர் தனுஷ்கோடி 45, த.வெ.க., பிரமுகர். மே 31 இரவு சோழவந்தான் பேட்டையைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பிரசாத் 48, கருப்பட்டியில் பயணிகளை இறக்கிவிட்டு கருப்பட்டி ரயில்வே பீடர் ரோடு வழியாக டெப்போவுக்கு சென்றார். பள்ளபட்டி பிரிவு அருகே தனது காரை நிறுத்திவிட்டு தனுஷ்கோடி நின்றிருந்தார்.
பஸ் செல்ல வழியில்லாததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. தனது மகன்களான 18 வயது நிரம்பாத சிறுவர்களுக்கு போன் செய்து கத்தியை எடுத்து வரச் சொல்லிய தனுஷ்கோடி, அரசு பஸ் டிரைவரை வெட்டிவிட்டு தப்பியோடினார். சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.
---
