UPDATED : செப் 10, 2026 10:36 PM
ADDED : செப் 10, 2026 07:03 PM
திருநகர்: தேவி நகர் கொத்தனார் கோபிநாத். இவரது மனைவி விஜயலட்சுமி 21. மூன்றாண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. கோபிநாத்துக்கு மதுப் பழக்கம் உள்ளதால், தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். செப். 7 இரவில் விஜயலட்சுமி வீட்டில் துாக்கிட்டதாக கூறிய கோபிநாத், மனைவியின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். திருநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
ஆர்.டி.ஓ. விசாரணையில், 'சம்பவ நாளில் ஏற்பட்ட தகராறில் கழுத்தை கோபிநாத் பிடித்ததால் விஜயலட்சுமி இறந்து விட்டார். இதைதொடர்ந்து அவரை வீட்டில் துாக்கில் தொங்கவிட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரிந்தது. கோபிநாத்தை திருநகர் போலீசார் கைது செய்தனர்.
-
* மருத்துவமனையில் சேவை செய்ய உத்தரவு மதுரை: செல்லுார், மாடக்குளம், அவனியாபுரம் போலீஸ் ஸ்டேஷனிற்குட்பட்ட பகுதிகளில் டூவீலர், கண்காணிப்பு கேமரா திருடிய வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்து இளம் சிறார் நீதி குழுமம் உத்தரவிட்டது. அடிதடி வழக்கில் ஜெய்ஹிந்த்புரம் போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்கள் ஆறு மாதங்கள் மதுரை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சமூகசேவை செய்ய உத்தரவிடப்பட்டது.
--
* வீட்டில் திருட்டு திருமங்கலம்: சங்கர் நகரை சேர்ந்தவர் டிரைவர் பாபு. இவரது மனைவி சுதா. இருவரும் இரவு நேரங்களில் அருகில் உள்ள மகள் காவியா வீட்டுக்குச் சென்று தங்குவது வழக்கம். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ. 28 ஆயிரத்தை திருடிச் சென்றனர். திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
---
