ADDED : மார் 09, 2026 05:24 AM
அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
வாடிப்பட்டி: தனிச்சியம் வடக்குத் தெரு மாதவன் 44, மெயின் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது கடையின் பூட்டை உடைத்த நபர்கள் உள்ளே இருந்த கேமரா, பிளாஷ் லைட், லென்ஸ், பேக் ரொக்கம் என ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிச் சென்றனர். அதே பகுதி கோபால கிருஷ்ணனின் 22, டாட்டூ கடையிலும் பூட்டை உடைத்து டாட்டூ குத்தும் இயந்திரம், மை ரூ.7 ஆயிரத்தை திருடிச் சென்றுள்ளனர். இன்ஸ்பெக்டர் கணேசன், எஸ்.ஐ.திவ்யா மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.
'ஷாக்' அடித்து டிரைவர் பலி
சோழவந்தான்: காடுபட்டியைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி 48, தனியார் டிரைவர். இவர் கட்டி வரும் புது வீட்டின் கட்டடச் சுவர்களை தண்ணீரால் நனைக்கச் சென்றுள்ளார். மோட்டாரில் ஏற்பட்ட மின்கசிவால் சம்பவ இடத்திலேயே பலியானார். இவருடைய குழந்தைகள் மனோஜ் 17, சந்தியா 15, ஆகியோர் முறையே பிளஸ்2, 10ம் வகுப்புகளில் படிக்கின்றனர். இவரது மனைவி 4 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டதால், ஆதரவின்றி தவித்த குழந்தைகளைக் கண்டு அப்பகுதியினர் சோக மடைந்தனர்.
விபத்தில் ஒருவர் பலி
கொட்டாம்பட்டி: விழுப்புரத்தில் இருந்து 12 பேர் எட்டயபுரம் வெக்காளியம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வேனை கிளியனுார் சந்தோஷ் குமார் 24, ஓட்டினார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மணப்பட்டி நான்கு வழிச்சாலை அருகே ரோட்டோரம் நின்று இருந்த லாரிமீது, பின்னால் சென்ற வேன் மோதியது. வேனில் பயணித்த விழுப்புரம் மாவட்டம் வரம்பூர் சரவணன் 40, இறந்தார். விஜயகுமார் 37, முத்து 53, பானு 43, செல்வம் 48, உள்பட 12 பேர் மேலுார், மதுரை அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கொட்டாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
போக்சோவில் சிறுவன் கைது
மதுரை: பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியிடம் அலைபேசியில் பேசி பழகினார். மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இந்நிலையில் மாணவிக்கு வயிற்றில் பிரச்னை ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவர் கர்ப்பிணியாக இருப்பதும், விசாரணையில் சிறுவன் காரணம் எனவும் தெரிந்தது. சிறுமி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தெற்கு மகளிர் போலீசில் அளித்த புகாரில் போக்சோ சட்டத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டார்.

