ADDED : மே 29, 2026 04:55 AM

* பெண் கொலையில் மூவர் கைது
மேலுார்: வெள்ளமுத்தன்பட்டி ஆக்டிங் டிரைவர் ராஜ்குமார் 33, நேற்று முன்தினம் திருவனேந்தல் கண்மாயில் கல்லால் முகம் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இவ் வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த வடமாடு மஞ்சு விரட்டு வீரர்களான சகோதரர்கள் அருள் 25, அருண் 20, நண்பர் நவநீதன் 20, ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் நேற்று முன்தினம் நால்வரும் மது அருந்திய போது சகோதரர்களின் தாயை ராஜ்குமார் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதால் சகோதரர்கள் மற்றும் நண்பன் நவநீதன் உள்ளிட்ட மூவர் கல்லால் தாக்கி ராஜ்குமாரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.
அகதிகள் முகாமில் இருவர் கைது
மதுரை: ஆனையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், பாதுகாப்புக்காக பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராக்கள், போகஸ் லைட்டுகளை இருவர் போதையில் உடைத்ததுடன், அப்பகுதியினரை மிரட்டிரகளையில் ஈடுபட்டனர். புகாரின் பேரில், அதே முகாமைச் சேர்ந்த சந்துரு 28, சுதன் 26 ஆகியோரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.
நாய் கடித்து 9 பேர் காயம்
அலங்காநல்லுார்: பேரூராட்சி பகுதியில் நேற்று காலை முனியாண்டி கோயில் துவங்கி போலீஸ் ஸ்டேஷன் ரோடு, வாடிவாசல் பகுதி, சந்தைமேடு ரோட்டில் நின்றிருந்தவர்கள், நடந்து சென்றவர்கள் என 7 பேரை வெறி நாய் கால்களில் கடித்து காயப்படுத்தியது. நாடக மேடையில் அமர்ந்திருந்த 60 வயது முதியவர்களை கால்களில் கடித்துக் குதறியது. காயமடைந்தவர்கள் அலங்காநல்லுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். ஏழு பேர் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று திரும்பினர். கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். பேரூராட்சி நிர்வாகம் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
தடுப்புச் சுவரில் மோதி சிறுவன் பலி
திருப்பரங்குன்றம்: மதுரை பைக்காரா சக்திவேல் மகன் காளிமுத்து 17, அதே பகுதி ராஜ்குமார் மகன் புவனேஸ்வரன் 18, இருவரும் நேற்று காலை டூவீலரில் பசுமலை நோக்கி சென்றனர். ரோட்டின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் டூ வீலர் மோதியதில் டூவீலரை ஓட்டிய புவனேஷ்வரன் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த காளிமுத்து பலத்த காயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.
