ADDED : ஏப் 17, 2026 11:21 PM
மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் (ஏப்.18) முதல் 20ம் தேதி வரை தபால் ஓட்டுகளை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 30 ஆயிரம் பேர் வரை தபால் ஓட்டுகள் செலுத்த உள்ளனர். இம்முறை ஓட்டுச்சீட்டுகளைப் பெற்றவர்களுக்கு தனி மையம் ஏற்படுத்தி, குறிப்பிட்ட நாளில் அங்குள்ள பெட்டியில் செலுத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோர் 3,500 பேருக்கு ஏப்.13 முதல் வீடுகளுக்கு நேரில் சென்று ஓட்டுச் சீட்டை கொடுத்து ஓட்டுக்களை பதிவு செய்து பெற்றனர். தேர்தல் பணியில் ஈடுபடும் 14 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு அவரவர் பயிற்சி வகுப்புகளில் பெட்டிகளை வைத்து அங்கேயே செலுத்தும்படி தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தவிர 6 ஆயிரம் போலீசார் இன்றும், நாளையும் அவுட்போஸ்ட் மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி வளாகத்தில் ஓட்டளிக்கின்றனர். இதேபோல் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளோர் 600 பேர், தேர்தல் பணியில் ஈடுபட்டள்ள இதர அலுவலர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் இன்று முதல் ஏப்.,20 வரை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் ஓட்டுக்களை செலுத்தலாம் என கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
