/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அ.தி.மு.க.,வுடன் 'டீலிங்' நடக்கும்போதே விஜய் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு; பின்னணி என்ன
/
அ.தி.மு.க.,வுடன் 'டீலிங்' நடக்கும்போதே விஜய் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு; பின்னணி என்ன
அ.தி.மு.க.,வுடன் 'டீலிங்' நடக்கும்போதே விஜய் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு; பின்னணி என்ன
அ.தி.மு.க.,வுடன் 'டீலிங்' நடக்கும்போதே விஜய் கட்சியுடன் பிரசாந்த் கிஷோர் பேச்சு; பின்னணி என்ன
ADDED : பிப் 12, 2025 11:08 PM
மதுரை : மீண்டும் ஆட்சியை பிடிக்க அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரிடம் அ.தி.மு.க., 'டீலிங்' பேசிக்கொண்டிருக்கும் நிலையில், அவரோ த.வெ.க., தலைவர் விஜயுடன் 'டீலிங்' பேசிக்கொண்டிருப்பது அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பின் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடக்கிறது. 2011 முதல் 10 ஆண்டுகள் வரை அ.தி.மு.க., ஆட்சி இருந்த நிலையில் 2021ல் தி.மு.க., ஆட்சி அமைந்தது. உட்கட்சி பிரச்னை, கட்சியில் பிளவு போன்ற காரணங்களால் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல், லோக்சபா தேர்தலில் அடுத்தடுத்து அ.தி.மு.க.,விற்கு நினைத்த வெற்றி கிடைக்கவில்லை.
'டீலிங்' பேசப்பட்டது
பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் அ.தி.மு.க., ஓட்டுகளை பிரித்த நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று தன் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என பழனிசாமி இப்போதே திட்டங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாகதான் அரசியல் ஆலோசகரும், தி.மு.க., ஆட்சி அமைய பல 'டிப்ஸ்'களை கொடுத்தவருமான 'ஐபேக்' நிறுவனர் பிரசாந்த் கிஷோரிடம் அ.தி.மு.க., தரப்பில் 'டீலிங்' பேசப்பட்டது.
தி.மு.க., ஆட்சி அமைய தலைமையிடம் பிரசாந்த் கிஷோரை அறிமுகப்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசனின் நண்பரான ஆதவ் அர்ஜூனா. பிரசாந்த் கிஷோரின் நண்பரான இவரும் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து வருகிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்தவர், முதல்வர் பதவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்ததால் சமீபத்தில் தி.மு.க., நெருக்கடி காரணமாக வெளியேறி விஜயின் த.வெ.க.,வில் இணைந்தார். தற்போது அக்கட்சியில் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக உள்ளார்.
'அசைன்மென்ட்'
சட்டசபை தேர்தலில் த.வெ.க., அதிக 'சீட்'களை பெற்று விஜய் முதல்வராகவோ அல்லது 'கிங் மேக்கர்' ஆகவோ இருக்க வேண்டும் என்பது ஆதவ் அர்ஜூனனுக்கு கொடுக்கப்பட்டுள்ள 'அசைன்மென்ட்'. அதன் ஒருபகுதியாகதான் விஜயுடன் பிரசாந்த் கிஷோரை இருமுறை நேரில் சந்திக்க வைத்தார். தேர்தல், அரசியல் வியூகம் குறித்து சில 'டிப்ஸ்'களை விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தங்களுடன் 'டீலிங்' செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர், விஜயிடம் 'டீலிங்' பேசி வருவதை கண்டு அ.தி.மு.க.,வினர் அதிர்ச்சியில் உள்ளனர். அதேசமயம் யாரையும் நம்பாமல் கட்சி பெயர், சின்னம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கென இருக்கும் செல்வாக்கை நம்பி பூத் அளவில் இருந்து கட்சியை அ.தி.மு.க., வலுப்படுத்தி வருகிறது.
இதுகுறித்து நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'பிரசாந்த் கிஷோர் 2021 சட்டசபை தேர்தலின்போது முதலில் மக்கள் நீதி மய்யம், அ.தி.மு.க.,வுடன் 'டீலிங்' பேசிவிட்டுதான் தி.மு.க.,விற்கு தேர்தல் ஆலோசகராக சென்றார். அதுபோல்தான் இப்போதும். த.வெ.க., உள்ளிட்ட கட்சிகளுடன் 'டீலிங்' பேசிவிட்டு கடைசியில் அ.தி.மு.க.,வுக்குதான் ஆலோசகராக வருவார்' என்றார்.

