/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணம் மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்
/
பணம் மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி மறியல்
ADDED : டிச 09, 2024 05:24 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே சின்னஉலகாணியை சேர்ந்தவர் பால்பாண்டி 40. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். உறவினர்கள், நண்பர்களிடம் பணத்தை இரட்டிப்பாகி தருவதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு வசூல் செய்துள்ளார்.
திருமங்கலம், கொக்குளம், உலகாணி, கல்லணை உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்துள்ளனர்.
ஒரு சிலருக்கு மட்டும் பணத்தை இரட்டிப்பாக கொடுத்துள்ளார் பால்பாண்டி. பலருக்கு காசோலை கொடுத்துள்ளார். பணம் இல்லை என காசோலை திரும்பியது. இதனால் பணம் கொடுத்த பலரும் பால்பாண்டியிடம் திரும்ப தரும்படி நெருக்கடி கொடுக்கவே, தலைமறைவானார்.
ஏமாந்தவர்கள் பால்பாண்டி மீது மதுரை எஸ்.பி, திருமங்கலம் டி.எஸ்.பி., என போலீசாரிடம் புகார் கொடுத்தனர். 25 நாள்களுக்கு முன்பு ஏமாந்தவர்கள், பால்பாண்டியை கைது செய்ய வேண்டும். தங்களது பணத்தை திருப்பிதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூடக்கோவில் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
போலீசார் பால்பாண்டி மனைவி பூமாரி 33, பால்பாண்டியின் தந்தை காளிமுத்து 71, தம்பி உக்கிரபாண்டி 38, ஆகியோரை கைது செய்தனர். பின்னர், கைதான மூவரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பால்பாண்டியை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று திருமங்கலம் - கூடக்கோவில் ரோடு சின்ன உலகாணியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால் கலைந்து சென்றனர். மறியலால் அப்பகுதியில் 3:00 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.