/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வருங்கால வைப்பு நிதி புதிய திட்ட விளக்க கூட்டம்
/
வருங்கால வைப்பு நிதி புதிய திட்ட விளக்க கூட்டம்
ADDED : ஜூலை 24, 2025 04:43 AM

திருமங்கலம் : வருங்கால வைப்பு நிதியில் மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் கப்பலுார் தொழிற்பேட்டையில் நடந்தது.
பி.எப்., மண்டல கமிஷனர் அழகிய மணவாளன் தலைமை வகித்தார். உதவி கமிஷனர் ஆதர்ஷ் கைமாத்தியா, சிட்கோ தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் ரகுநாத ராஜா முன்னிலை வகித்தனர்.
முன்னாள் தலைவர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் திண்ணப்பன், அமலாக்க அதிகாரிகள் ஹேமமாலினி, செந்தில்குமார், மனோகரன், அண்ணாதுரை, ரமணகேஷா, விஜயகுமார் பங்கேற்றனர்.
கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், தியாகராஜர் மில்ஸ், திருமங்கலம் மெப்கோ, பாரமவுண்ட் மில்ஸ், பி.கே.என்., கல்வி நிறுவனங்கள் உள்பட 100க்கும் மேற்பட்டநிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மண்டல கமிஷனர் அழகிய மணவாளன் பேசியதாவது: தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் பி.எப்., நிதிக்காக பணம் பிடித்தம் செய்து அனுப்புகின்றனர்.
இதில் உரிமையாளர், தொழிலாளரை ஊக்குவிக்க புதிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கி உள்ளது.
இத் திட்டத்தில் 2025 ஆக. 1 முதல் 2027 ஜூலை 31 வரை புதிதாக பணியில் சேர்வோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதில் ஒரு தொழிலாளிக்கு ரூ. 15 ஆயிரம் வரை 2 தவணைகளாக ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அதேபோல் தொழிலாளியை வேலைக்கு அமர்த்தியதற்காக அந்நிறுவனங்களின் கணக்கில் ஒரு தொழிலாளிக்கு ரூ. 3 ஆயிரம் வீதம் மாதந்தோறும் 2 ஆண்டுகளுக்கு வரவு வைக்கப்படும் ( இதுவே உற்பத்தி தொழில் நிறுவனங்கள் எனில் 4 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்). இதன் மூலம் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

