sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை

/

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை

டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள், விவசாயிகள் பேரணி! ஸ்தம்பித்தது மதுரை

2


ADDED : ஜன 08, 2025 05:48 AM

Google News

ADDED : ஜன 08, 2025 05:48 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை மாவட்டம் மேலுார் அரிட்டாபட்டி பகுதியில் மத்திய அரசின் டங்ஸ்டன் சுரங்கத்திட்டத்திற்கான டெண்டரை ரத்து செய்யக் கோரி அப்பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நடை, வாகன பயணம் மேற்கொண்டு வந்ததால் மதுரை மாநகரமே ஸ்தம்பித்தது. திட்டம் ரத்து என தமிழக அரசு அரசிதழில் வெளியிடும் வரை போராட்டம் தொடரும் எனவும் மக்கள் அறிவித்தனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று யானைமலை ஒத்தகடையில் ஒன்று சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மதுரையை நோக்கி நடைபயணம் புறப்பட்டனர். மேலுார் நரசிங்கம்பட்டியிலிருந்து (அரிட்டாபட்டி அருகே) மதுரை தமுக்கம் மைதானம் எதிரிலுள்ள தந்தி அலுவலகம் வரை 16 கி.மீ.,க்கு பொது மக்கள், விவசாயிகள் இப்பயணத்தை நேற்று காலை 8:00 மணிக்கு மேற்கொண்டனர். போலீசார் நடைபயணத்திற்கு அனுமதி மறுத்து வாகன பேரணியாக செல்ல அறிவுறுத்தினர். தடையை மீறி வெள்ளரிபட்டி, சிட்டம்பட்டி டோல்கேட் வரை மக்கள் நடைபயணம் வந்தனர். அவர்களை கொடிக்குளம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

வாகன பேரணியாக மாறியது


பின் 500க்கும் மேற்பட்ட வேன், டிராக்டர், ஆட்டோக்களில் ஒத்தக்கடை, உத்தங்குடி, மாட்டுத்தாவணி, மாவட்ட நீதிமன்றம் வரை வாகன பேரணியாக வந்தனர். மாவட்ட நீதிமன்றம் அருகே வந்ததும் இரு பிரிவுகளாக பிரித்து ஒரு பிரிவு வாகனங்களை மாநகராட்சி அலுவலக பாதையிலும், மற்றொரு பிரிவினரை காந்தி மியூசியம் ரோடு வழியாகவும் தபால் தந்தி அலுவலகம் செல்ல போலீசார் அனுமதித்தனர். நிறைவாக தந்தி அலுவலகம் அருகே வணிகர்கள், வர்த்தகர்கள், வழக்கறிஞர்களும் ஒன்று திரண்டனர். இதனால் தல்லாகுளம், கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பாதையில் நடந்து செல்வதற்கு கூட இடமின்றி ரோடே ஸ்தம்பித்தது. வாகனங்கள் செல்ல முடியவில்லை.

சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்


ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் பேசியதாவது: தமிழக அரசு அவசர தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ. உட்பட அனைத்து கட்சிகளும் ஒருமித்து டங்ஸ்டன் திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. பிரதமர் மோடி அரசு அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு பதிலாக இரண்டு கிராமங்களை மட்டும் பல்லுயிர் பெருக்க மண்டலமாக அறிவித்து அந்த இரு கிராமங்களை மட்டும் டங்ஸ்டன் திட்டத்தில் இருந்து விடுவித்துள்ளது. மீதியுள்ள 46 கிராமங்களை டெண்டரில் இருந்து விடுவிக்கவில்லை.

நில நிர்வாகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. மாநில அரசின் அனுமதியில்லாமல் எந்த நிறுவனமும் விளைநிலங்களை அபகரிக்க முடியாது. பிரதமர் மோடி நினைத்தால் கூட அந்த மண்ணில் கால் வைக்க முடியாது. இதைத்தான் அரசியலமைப்பு சட்டம் சொல்கிறது. தற்போது தமிழக சட்டசபை நடைபெற்று வருகிறது. அதில் 110 விதியின் கீழ் அரிட்டாபட்டி பகுதியை டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி மறுத்து 48 கிராமங்களையும் பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்ப்பெருக்க மண்டலமாக அறிவித்து சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை தொல்லியல், வேளாண் துறையின் கீழ் அரசாணையாக அரசிதழில் வெளியிடும் வரை போராட்டம் தொடரும்.

இயற்கை வளங்கள், வரலாற்று சின்னங்கள், வாழ்வாதாரத்திற்கான விவசாய நிலங்களை அபகரிக்கக்கூடாது என்பதற்கான விவசாயிகள், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருமே ஒன்று திரண்டு பன்முகத்தன்மையுடன் அறிவுப்பூர்வமான போராட்டத்தை நடத்துகிறோம். உயிரை விட எங்கள் மண் எங்களுக்கு சொந்தம்.

அரசியல் கட்சி துாண்டுதலால் நடைபெறும் போராட்டம் அல்ல. மத்திய மாநில அரசுகள் மாறி மாறி கை காட்டி இனி தப்பிக்க முடியாது என்றார்.

மாநில கவுரவத் தலைவர் ராமன், மண்டலத் தலைவர் ஆதிமூலம், செயலாளர் மணிவாசகம், இளைஞரணி செயலாளர் அருண், விவசாய சங்க பிரதிநிதிகள், அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ரத்தினவேலு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் வேல்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

போலீசார் தடியடி

n மேலுார் ஒத்தக்கடையில் இருந்து வாகன பேரணிக்கு அனுமதி வழங்கிய நிலையில் மக்கள் நடைபயணம் மேற்கொண்டதால் அனுமதி மறுக்கப்பட்டது. வெள்ளரிப்பட்டி அருகே போலீசார் தடுத்து நிறுத்தி லேசான தடியடி நடத்தினர்.n போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வழியெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு பொதுமக்கள் தண்ணீர், குளிர்பானம் வழங்கி உற்சாகப்படுத்தினர்.n கொடிக்குளத்தில் இருந்து வாகன பேரணிக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.n மாவட்ட நீதிமன்றம் அருகே இரு பிரிவாக வாகனங்களை போலீசார் பிரித்து விட்டபோது இரும்பு தடுப்புகளை உடைத்து வாக்குவாதம் செய்தனர்.n காலை 8:00 மணிக்கு ஒத்தக்கடையில் துவங்கிய நடைபயணம், வாகன பேரணி மதுரை தமுக்கம் அருகே தந்தி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்துடன் மதியம் 3:30 மணிக்கு நிறைவடைந்தது.n பேரணியால் மதுரை நகரமே போக்குவரத்து நெருக்கடியால் ஸ்தம்பித்தது.n தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, மதுரை கமிஷனர் லோகநாதன், மதுரை, திண்டுக்கல், தேனி எஸ்.பி.,க்கள் அரவிந்த், பிரதீப், சிவபிரசாத் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.








      Dinamalar
      Follow us