ADDED : ஜூலை 18, 2025 04:28 AM
திருமங்கலம்: திருமங்கலம் அருகே நடுவக்கோட்டையில் அய்யனார், காவிரி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் அய்யனார் சுவாமி கோவிலுக்குள்ளும், காவேரி கருப்பசாமி கோவிலுக்கு வெளியிலும் உள்ளனர். ஊர்க்காவல் தெய்வமான காவேரி கருப்பசாமி இரவு நேரத்தில் குதிரை வாகனத்தில் வலம் வந்து காப்பதாக ஐதீகம் உள்ளது.
இதனால் ஒவ்வொரு ஆடி முதல் தேதி புரவி எடுப்புத் திருவிழா இந்த கோவிலில் நடைபெறும். ஆடிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் பெயர்களை பதிவு செய்து குதிரை செய்யும் நபர்களிடம் கூறுவர். நேற்று நடந்த விழாவில் 14 குதிரை சிலைகள் செய்யப்பட்டது. ஊர் மந்தையில் குதிரை சிலைகளுக்கு கண் திறந்து வீதிகளில் ஊர்வலமாக சென்று காவேரி கருப்பசாமி கோவிலில் குதிரைகளை இறக்கி வைத்து வழிபடுவர். இதையடுத்து கிடாய் வெட்டுதல், மொட்டை எடுத்து காது குத்துதல் போன்ற வேண்டுதல்களும் நிறைவேற்றப்படும்.