UPDATED : அக் 20, 2026 05:58 PM
ADDED : அக் 20, 2026 05:54 PM

பேரையூர்: பேரையூர் பகுதியில் ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லை.
இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. இந்தக் கண்மாய்களில் பல ஆண்டுகளாக துார் வாராததால், சீமைக் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இக் கண்மாய்களுக்கு நீர்கொண்டு வரும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி காணாமல் போய்விட்டன.
சில இடங்களில் துார்ந்து போய் உள்ளன. இதனால் மழை நீர் திசை மாறி சென்று விடுகிறது. கண்மாய்கள் வறண்டு கிடப்பதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி துார்வாரி சீரமைத்து கண்மாய்களுக்கு நீர் வந்து சேர, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆண்டுதோறும் சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. நீர்வரத்து இல்லாமல் ஊரையொட்டியுள்ள பல கண்மாய்களின் கரையோரம் குப்பை மேடாகவும், ஊரின் கழிவுநீர் தேங்கும் கேந்திரமாகவும் மாறி உள்ளன. கண்மாய்களுக்கு நீர் வராததற்கு வரத்து கால்வாய்கள் பலவும், ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி இருப்பதே காரணம்.
இதனால் ஒரு மாதமாக அவ்வப்போது மழை பெய்தும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லை. நீர்வளத்துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் வரத்து கால்வாய்களையும், கண்மாய்களையும் துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
