ADDED : மார் 19, 2026 04:30 AM

மதுரை: குழந்தைப் பேரின்மை, உடற்பருமன் பிரச்னைகளுக்கு 'ரா டயட்' எனும் சமைக்காத உணவு சாப்பிடும் சிகிச்சை முறை குறித்து மதுரை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வுத் துறை வழிகாட்டுகிறது.
இங்குள்ள மகப்பேறு வார்டில் மாதம் 30க்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறின்மை சிகிச்சைக்காக வருகின்றனர். அனைவரும் 35 வயதுக்குட்பட்டவர்கள். திருமணமாகி இரண்டாண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாவிட்டால் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவர்களுக்கு அலோபதி முறையில் ரத்தப்பரிசோதனை, பிற பரிசோதனைகள் செய்யப்பட்டாலும் உடல் பருமன், கர்ப்பப்பை பிரச்னை உள்ளவர்கள் யோகா மற்றும் இயற்கை நல்வாழ்வு துறைக்கு அனுப்பப்படுகின்றனர்.
துறைத்தலைவி நாகராணி நாச்சியார் கூறியதாவது: நேச்சுரோபதி முறையில் 'ரா டயட்'முறையில் சமைக்காத, பதப்படுத்தாத உணவுகள் உட்கொள்வதை ஊக்கப்படுத்துகிறோம். இதில் 40 முதல் 48 டிகிரி சென்டிகிரேடுக்கு மேல் வெப்பமிடாத உணவுகளில் அவற்றின் இயற்கை சத்துகள், என்சைம்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதில் ஆப்பிள், வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரஞ்சு, திராட்சை, தர்பூசணி பழங்கள், கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பீட்ரூட், முட்டைக்கோஸ், கீரை, லெட்யூஸ் காய்கறிகள், முளைகட்டிய பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, பாதாம், வால்நட், நிலக்கடலை, சூரியகாந்தி விதை, ஆலி விதை போன்ற உலர் பருப்புகளைச் சேர்க்கலாம். தேங்காய், இளநீரும் சமைக்காத உணவில் சேர்க்கப்படுகிறது.
'ரா டயட்' பின்பற்றும் போது சரிவிகித உணவு சாப்பிடாவிட்டால் விட்டமின் பி12, புரதம், இரும்புச்சத்து, கால்சியம் சத்துகளின் குறைபாடு ஏற்படும். அதிக நார்ச்சத்து காரணமாக சிலருக்கு வயிற்று உப்புசம், வாயு பிரச்னை ஏற்படலாம். ஜீரண சக்தி குறைந்த குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால நோயாளிகளுக்கு இந்த 'ரா டயட்' பொருந்தாது என்றார்.
