/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குமா சிபாரிசு; காப்பீடு அட்டையும் 'கவனிப்பும்' கட்டாயம்
/
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குமா சிபாரிசு; காப்பீடு அட்டையும் 'கவனிப்பும்' கட்டாயம்
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குமா சிபாரிசு; காப்பீடு அட்டையும் 'கவனிப்பும்' கட்டாயம்
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குமா சிபாரிசு; காப்பீடு அட்டையும் 'கவனிப்பும்' கட்டாயம்
ADDED : ஜூலை 26, 2024 06:42 AM

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு இலவச காப்பீட்டு திட்ட அடையாள அட்டை கேட்பதாகவும் சிபாரிசு இருந்தால் மருத்துவ கவனிப்பு உடனடியாக நடப்பதாகவும் நோயாளிகள் வேதனை தெரிவித்தனர்.
சிகிச்சை, அறுவை சிகிச்சை, மருந்துகள், கண்காணிப்பு அனைத்தும் இலவசம் என்றாலும் மதுரை அரசு மருத்துவமனைக்குள் சென்று சிகிச்சை பெறுவது சவாலாக உள்ளது. முன்பெல்லாம் அவசர அறுவை சிகிச்சையோ, விபத்தோ எதுவாக இருந்தாலும் சிகிச்சை உடனடியாக தொடங்கப்பட்டு விடும். தற்போது எதற்கெடுத்தாலும் முதல்வரின் இலவச காப்பீட்டு திட்ட அட்டை கேட்டு தாமதம் செய்கின்றனர். ரோட்டிலோ, வீட்டிலோ விபத்தில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்படுபவர்களுக்கு மருத்துவமனையின் இந்த புதிய அணுகுமுறை மலைப்பை ஏற்படுத்துகிறது.
இலவச காப்பீட்டுத்திட்டம் தான் என்றாலும் எல்லோருமே விபத்தை எதிர்நோக்கி அடையாள அட்டையை முன்கூட்டியே பெற்றுக் கொள்வதில்லை. திடீரென மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் மருத்துவமனை சென்றால் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டை இல்லாமல் சிகிச்சை அளிக்க மறுக்கின்றனர். மருத்துவமனையில் நோயாளியை சேர்த்து விட்டு கலெக்டர் அலுவலகம் சென்று ஒருநாள் முழுவதும் நின்று அடையாள அட்டை பெற்ற பின்பே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில நேரங்களில் நோயாளி குடும்பத் தலைவராக இருந்தால் கை, காலில் கட்டுடன் பரிதாபமாக கலெக்டர் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டியுள்ளது. அடையாள அட்டை கிடைக்கும் வரை சில நேரங்களில் அறுவை சிகிச்சை கூட தள்ளிப்போடப்படுகிறது. இலவசம் என்ற வார்த்தையே இங்கு மெல்ல மறைந்து விடும் அளவிற்கு மருத்துவமனை பணியாளர்கள் நடந்துக் கொள்வதாக நோயாளிகள் தெரிவித்தனர்.
டீன் தர்மராஜ் கூறியதாவது: இலவச காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை இருந்தால் இன்சூரன்ஸ் பெற எளிதாக இருக்கும் என்பதால் பணியாளர்கள் கேட்கின்றனர். அடையாள அட்டை இல்லாததால் எந்த அறுவை சிகிச்சையும் நிறுத்தப்படுவதில்லை. சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுவதாக நினைத்தால் டீன் அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். பாரபட்சமின்றி எல்லோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.