ADDED : ஜன 21, 2025 05:59 AM
பேரையூர்: பேரையூர் பகுதியில் இந்த ஆண்டு சிவப்பு சோளம் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விலை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இப்பகுதியில் மானாவாரி பயிர்களாக சோளம், மக்காச்சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு வருகின்றன. சோளம் வகையில் சிவப்பு சோளம் சேடபட்டி, சின்னகட்டளை, குப்பல் நத்தம், பூசலபுரம், அத்திபட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் பயிராகியுள்ளது.
கடந்தாண்டு குவிண்டால் ரூ.3800க்கு விற்பனையானது. இந்தாண்டு ரூ. 3200 க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு நல்லவிலை இருந்ததால் இந்தாண்டு ஏராளமான விவசாயிகள் அதனை அதிகளவில் பயிரிட்டனர். இதனால் கடந்தாண்டைப் போல விலை கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் ரூ.600 குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சோளத்தை காய வைத்து அனுப்புவதற்கு, பணியாட்கள் அதிகம் தேவைப்படும். இந்நிலையில் விளைச்சல் இருந்தும் விலை குறைவாக உள்ளதால், செலவினம் அதிகரித்து லாபம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் சிவப்பு சோள விவசாயிகள் சோகமடைந்துள்ளனர்.

