/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'முகம்' பார்க்காமல் உடல்களை எடுத்துச் சென்ற உறவினர்கள் மயானத்தில் கடைசி நிமிட 'திக் திக்'
/
'முகம்' பார்க்காமல் உடல்களை எடுத்துச் சென்ற உறவினர்கள் மயானத்தில் கடைசி நிமிட 'திக் திக்'
'முகம்' பார்க்காமல் உடல்களை எடுத்துச் சென்ற உறவினர்கள் மயானத்தில் கடைசி நிமிட 'திக் திக்'
'முகம்' பார்க்காமல் உடல்களை எடுத்துச் சென்ற உறவினர்கள் மயானத்தில் கடைசி நிமிட 'திக் திக்'
ADDED : மார் 10, 2026 06:16 AM
மதுரை, விருதுநகர், கரூரில் நடந்த விபத்துகளில் காயமடைந்த இருவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் இறந்த உறவினரின் முகத்தை பார்க்காமல் உடலை அப்படியே மயானத்திற்கு கொண்டு சென்றபோது உடல்கள் மாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
விருதுநகரைச் சேர்ந்த தெய்வேந்திரன் 58, சாலை விபத்தில் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதேபோல கரூரைச் சேர்ந்த ஆனந்தராஜ் 66, விபத்தில் சிக்கி மதுரையில் சேர்க்கப்பட்டார். இருவரும் நேற்று முன்தினம் இறந்ததால் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
விருதுநகர், கரூர் போலீசார் அனுமதி கடிதத்துடன் நேற்று முன்தினம் மாலையில் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டு உடல் முழுவதும் சுற்றப்பட்டு முகம் மட்டும் தெரியுமாறு மார்ச்சுவரியில் இருந்து அனுப்பப்பட்டது. இருமாவட்ட போலீசாரும் உடல்களை பெற்றுக் கொண்டதாக கையெழுத்திட்டனர்.
பொதுவாக பிரேத பரிசோதனைக்கு பின் பெரும்பாலானோர் உடலை நேரடியாக மயானத்திற்கு எடுத்துச் சென்று எரியூட்டுவர் அல்லது புதைப்பர். அதனால் கடைசியாக மார்ச்சுவரியில் இருந்து உடல் ஒப்படைக்கப்படும் போது உறவினர்கள் முகத்தை பார்த்த பின், மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். தெய்வேந்திரன், ஆனந்தராஜின் உடல்கள் இதுபோன்று ஒப்படைக்கப்பட்ட போது இருவரின் உறவினர்களும் முகத்தைப் பார்க்கவில்லை.
இதனால் தெய்வேந்திரனின் உடல் கரூருக்கும் ஆனந்தராஜின் உடல் விருதுநகருக்கும் மாற்றி எடுத்துச் செல்லப்பட்டது.
கடைசி நிமிட திடுக் மதுரையில் இருந்து விருதுநகருக்கு ஒரு மணி நேரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ஆனந்தராஜின் உடல் மயானத்தில் வைக்கப்பட்ட போது முகத்தை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். தெய்வேந்திரன் உடல் எங்கே என சிலநிமிடம் குழம்பிய பின் விருதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடல்கள் மாறியது அதன்பிறகே தெரியவந்ததால், கரூருக்கு சென்று கொண்டிருந்தது தெய்வேந்திரன் உடல் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
இருமாவட்ட போலீசாரும் பேசி, மதுரை அரசு மருத்துவமனைக்கு நேற்று அதிகாலை 12:30 மணிக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டு மீண்டும் அந்தந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில்,''மார்ச்சுவரியில் பிரேத பரிசோதனை செய்வதற்கும் செய்தபின் உடலை ஒப்படைக்கும் வரை போலீசார் தான் கண்காணிக்கவேண்டும். பிரேத பரிசோதனை செய்வது மட்டுமே மருத்துவமனையின் வேலை. உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் போது முகத்தைப் பார்த்து அடையாளத்தை உறுதி செய்ய போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினால் இதுபோன்ற சங்கடங்கள் நேராது,'' என்றனர்.

