சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை :மதுரைக்கு இரண்டாம் இடம்
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை :மதுரைக்கு இரண்டாம் இடம்
UPDATED : செப் 22, 2026 06:38 PM
ADDED : செப் 22, 2026 06:35 PM
மதுரை: முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 46 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மதுரை அரசு மருத்துவமனைக்கு மாநில அளவில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
மதுரை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தமிழ்நாடு உறுப்பு தான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது. டீன் அருள் சுந்தரேஷ் குமார் தொடங்கி வைத்தார். சிறுநீரகவியல், சிறுநீரியல், அறுவை வயிற்று கோளாறு இயல், மயக்கவியல் துறைகளின் பேராசிரியர்கள், டாக்டர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணைய (டிரான்ஸ்டன்) ஈடோலான் அமைப்பு ஏற்பாடு செய்தது. 2025 - 26 க்கான டிரான்ஸ்டன் விருதை மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி பெற்றது. முதல்வரின் இலவச காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2025 ல் தென்மாவட்ட அளவில் 24 மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்தும், 2026 ம் ஆண்டில் 22 மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்தும் சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்காக மாநில அளவில் மதுரை அரசு மருத்துவமனைக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. அதேபோல மூளைச்சாவு நோயாளிகளிடம் இருந்து கல்லீரல்களைப் பெற்று அறுவை சிகிச்சை செய்த வகையில் மூன்றாம் பரிசும் கிடைத்துள்ளது.
