ADDED : ஏப் 18, 2026 06:35 PM

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் நிரம்பி வழியும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து கடைகளின் முன்பாக தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மொத்த வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்னமாயன் கூறியதாவது: நேற்று முன்தினம் இரவில் மார்க்கெட்டில் பிளாட் நம்பர் 8ல் உள்ள முல்லைப்பெரியாறு கூட்டு குடிநீர்த்திட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் நிரம்பி வெளியேறியது. இந்த குடிநீர் மார்க்கெட்டில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் நிரம்பியது. வாய்க்கால் இடிந்து மேடாக உள்ளதால் குடிநீரும் கழிவுநீரும் கலந்து கடைகள் இருக்கும் இடத்தில் தேங்க ஆரம்பித்தது.
பொதுமக்கள் கழிவுநீரை மிதித்தபடியே காய்கறிகளை வாங்குவதால் நோய் ஆபத்து உள்ளது. கழிவுநீரை மிதித்தபடி கடைக்குள் செல்வதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறினால் லாரி மூலம் கழிவுநீரை உறிஞ்சி எடுக்கின்றனர். மீண்டும் கழிவுநீர் தேங்கினாலும் கண்டு கொள்வதில்லை. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றார்.
