ADDED : ஜன 20, 2025 05:28 AM
மதுரை: மதுரை மதிச்சியம் ஆழ்வார்புரம் செல்லும் வழியில் மகளிர் விடுதி முன்பாக 90 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மழை, குளிரில் நடுங்கியபடி இருந்தார். இதுபற்றிய தகவல் மாவட்ட கலெக்டர் சங்கீதாவுக்கு சென்றது. அவரை மீட்டு உரிய சிகிச்சை அளிக்கும்படி மதுரை செஞ்சிலுவை சங்கத்திற்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து செஞ்சிலுவை சங்க செயலாளர் ராஜ்குமார், வழக்கறிஞர் முத்துக்குமார் ஆகியோர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரிடம் விசாரித்ததில், ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த அவர் பெயர் குபேந்திரன். டெய்லராக வேலை செய்த அவர், சில நாட்களாக உடல்நிலை பாதிப்படைந்ததாகவும் கூறியுள்ளார்.
அவரை உறவினர்கள் ஆட்டோவில் ஏற்றி இங்கு விட்டுவிட்டுச் சென்றதும் தெரியவந்தது. வழக்கறிஞர் கூறுகையில், ''முதியவரின் உறவினர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு கவுன்சிலிங் அளித்துள்ளோம். சிகிச்சை முடிந்தபின் முதியவர் அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்'' என்றார்.