ADDED : ஏப் 20, 2026 11:25 PM

சோழவந்தான்: சோழவந்தான் ராயபுரத்தில் சுகாதாரவளாகம், சாக்கடை கால்வாய் பராமரிக்கப்படாததால் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இங்கு நகரி மெயின் ரோட்டில் துாய்மை பாரத இயக்கத்தில் 2021 ல் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பின்னர் 2023-24ல் ரூ.1.6 லட்சம் மதிப்பீட்டில் போர்வெல், மோட்டார் அமைக்கப்பட்டது.
இதனை ஏராளமானோர் பயன்படுத்தும் நிலையில் போதிய பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. வளாகத்தைச் சுற்றிலும் செடி, கொடிகள் முளைத்து புதராகிவிட்டது. இலைச்சருகுகள் குவிந்தும் அகற்றப்படவில்லை. கழிவறை குழாய்கள் அடைபடும் சூழல் உருவாகியுள்ளது.
இதனால் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு நிலவுகிறது. தேங்கிய நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதார வளாகம், பிற பகுதிகளில் 'பிளீச்சிங் பவுடர்' துாவுவதில்லை. பணியாளர்களை அமர்த்தி துாய்மைப் பணிகள் செய்யப்படுவதில்லை என அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
