ADDED : ஆக 26, 2026 04:17 AM

குன்றத்துார்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், புதுப்பேடில் ஐ.சி.ஐ.சி., வங்கியின் ஏ.டி.எம்., மையம் அமைந்துள்ளது.
இங்கு நேற்று முன்தினம் 9 லட்சம் ரூபாய் நிரப்பப்பட்ட நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து புகுந்த மர்ம நபர்கள், 'காஸ் வெல்டிங் கட்டர்' மற்றும் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி ஏ.டி.எம்., இயந்திரத்தின் பணப் பெட்டியைத் துளையிட்டு உடைத்துள்ளனர். அந்நேரம், மும்பையில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் அலாரம் அடித்ததை அடுத்து, அங்கிருந்த அலுவலர்கள் இது குறித்து தமிழக காவல் கட்டுப்பாடு அறைக்கு தெரிவித்தனர். ஆனால், ஏ.டி.எம்., மையத்தின் சரியான இருப்பிடத்தை தெரிவிக்கவில்லை. இதனால், போலீசார் நேற்று அதிகாலை அந்த மையத்தை தேடி கண்டுபிடித்து செல்வதற்குள் அதிலிருந்த பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர். அவர்கள் கண்காணிப்பு கேமராக்கள் மீது நுரை எழும்பும் ரசாயன ஸ்பிரே அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
