பாதுகாப்பான ரயில் இயக்கத்திற்கு செயல்முறை பயிற்சி அவசியம் பாதுகாப்பு இயக்குநர் வலியுறுத்தல்
பாதுகாப்பான ரயில் இயக்கத்திற்கு செயல்முறை பயிற்சி அவசியம் பாதுகாப்பு இயக்குநர் வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2026 05:50 AM
மதுரை:''பாதுகாப்பான ரயில் இயக்கத்திற்கு ஊழியர்களுக்கு செயல்முறை பயிற்சி அளிப்பது அவசியம்,'' என மதுரையில் ரயில்வே வாரிய பாதுகாப்பு இயக்குநர் ஹிதேந்திர மல்ஹோத்ரா வலியுறுத்தினார்.
நேற்று மதுரைக் கோட்டத்தில் சோழவந்தான் ஸ்டேஷன், விளாங்குடி தண்டவாள பராமரிப்பு, இயந்திர பணிமனை, சிலைமான் 'லெவல் கிராசிங்', மதுரை ஓடும் தொழிலாளர் ஓய்வு அறை ஆகிய இடங்களை பாதுகாப்பு இயக்குநர் ஆய்வு செய்தார். பின் கோட்ட ரயில்வே அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கள நிலைமையை புரிந்துகொண்டு, பாதுகாப்பு நடைமுறை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகள் தொடர்ந்து நேரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.
''மேற்பார்வையாளர்கள் நிறுவனத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களது திறன், நம்பிக்கை தான் ரயில்களை பாதுகாப்பாக இயக்க உதவும் காரணிகள். அவர்களது செயல்பாட்டுத் திறனை அதிகரிக்க செயல்முறை பயிற்சி அவசியம்'' எனவும் அவர் வலியுறுத்தினார்.
கோட்டத்தின் பார்சல், டிக்கெட் பரிசோதனை மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வருவதற்கு பாராட்டும் தெரிவித்தார். தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி லலித் மன்சுகானி, ரயில்வே வாரிய இயந்திரவியல் பாதுகாப்பு பிரிவு செயல் இயக்குநர் உத்கர்ஷ், கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
