/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை நிறுத்தம்
/
ரேஷன் கடைகளில் பட்டாசு விற்பனை நிறுத்தம்
ADDED : அக் 17, 2025 12:01 AM
மதுரை: கூட்டுறவுத் துறையின் கீழ் உள்ள மதுரை மாவட்ட ரேஷன் கடைகளில், பட்டாசு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக நேற்று முன்தினம் தினமலர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில் சுற்றறிக்கை மூலம் பட்டாசுகளை திரும்ப பெற உத்தரவிட்டு உள்ளார் மாவட்ட துணைப்பதிவாளர்.
மதுரை மாவட்ட கூட்டுறவுத் துறைக்குட்பட்ட ரேஷன் கடைகளில் லைசென்ஸ் பெறாமல், ஒவ்வொரு கடையிலும் ரூ.1000 மதிப்புள்ள 20 பட்டாசு பெட்டிகளை விற்க வேண்டும் என கூட்டுறவு மொத்த பண்டக சாலை, விற்பனை சங்க அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அக். 15ல் செய்தி வெளியானது. தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் (டாக்பியா) சங்கத்தினர் புகார் தெரிவித்த நிலையில், கூட்டுறவுத் துறை பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர் ஆசைத்தம்பி வெளியிட்ட சுற்றறிக்கையில், பொது விநியோகத் திட்ட கள அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பட்டாசுகள் விற்பனை செய்யாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு இருக்கும் பட்சத்தில் தொடர்புடைய சங்க நிர்வாகம் மூலம் மதுரை மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலையில் அவற்றை ஒப்படைக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.