ADDED : ஜன 22, 2024 05:16 AM
பள்ளியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி
மதுரை: கூடல்நகர் மேரி இமாக்குலேட் பள்ளியில் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் ஸ்மிதா தலைமை வகித்தார். மதுரை மேலுார் கல்வி மாவட்ட இளஞ்செஞ்சிலுவை சங்க அமைப்பாளர் ஜான்சன் முன்னிலை வகித்தார்.
இந்திய செஞ்சிலுவை சங்க மாவட்ட கிளை செயலாளர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே செஞ்சிலுவை சங்கம், பேரிடர் வகைகள், அதன் தாக்கம், அவசர கால முதலுதவியின் அவசியம் குறித்து பயிற்சி அளித்தார். பள்ளியின் இளஞ்செஞ்சிலுவை சங்க பொறுப்பாளர் விஜயபிரபாகரன் நன்றி கூறினார்.
பசுமை மாரத்தான்
மதுரை: மாணிக்கம் ராமசுவாமி கலை அறிவியல் கல்லுாரி (தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்) சார்பில் மதுரை பசுமை மாரத்தான் போட்டி நடந்தது. திருப்பரங்குன்றம் கிரிவலப்பாதையில் 6 கி. மீ., துாரம் நடந்த இப்போட்டியில் மதுரை, விருதுநகர், துாத்துக்குடியை சேர்ந்த 14 வயதுக்கு மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் 700 பேர் பங்கேற்றனர். அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. கல்லுாரி தலைமை நிர்வாக மேலாளர் வள்ளி ராமசாமி, இயக்குநர் கலைச்செல்வன், முதல்வர் பத்மாவதி, தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஸ் பங்கேற்றனர்.
பொங்கல் விழா
மதுரை: பாத்திமா கல்லுாரி வளாகத்தில் தமிழர் பாரம்பரிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதல்வர் செலின் சகாயமேரி துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், உழவர்கள் பிரதிபலன் பார்க்காமல் உழைப்பவர்கள். அவர்களை போற்றும் வகையிலும், கடவுளுக்கு நன்றி கூறும் வகையிலும் இந்நாளை போற்றுவோம் என்றார். அனைத்து பிரிவு மாணவிகள் பொங்கல் வைத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கினர்.