ADDED : மார் 15, 2024 07:18 AM
பள்ளியில் அறிவியல் தினம்
மதுரை: அத்திபட்டி ராமையாநாடார் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்கள் தங்கள் அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். சிறப்பு விருந்தினர் பிரகாஷ், மின்சார ரயில்வே இன்ஜின், வடிவமைப்பு, ஆராய்ச்சி அனுபவத்தை மாணவர்களிடம் பகிர்ந்தளித்தார். பள்ளி முதல்வர் கற்பக மலர் தலைமை வகித்தார். தலைவர் கிருபாநிதி, துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
கருத்தரங்கு
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுயநிதிப் பிரிவு அறிவு சார் சொத்து உரிமை திட்டக் குழு அமைப்பு மாணவர்களுக்கான கிளவுட் கம்ப்யூட்டிங்கில் ஐ.பி. சிக்கல்கள் குறித்த கருத்தரங்கு நடந்தது. கல்லுாரி செயலாளர் விஜயராகவன் தலைமை வகித்தார். தலைவர் ராஜகோபால், முதல்வர் ராமசுப்பையா, இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். எச்.சி.எல்., டெக்னாலஜி உயர் ஆலோசகர் மகேஷ்வரகுமார் பேசினார். கணினி அறிவியல் துறை தலைவர் தேவிகா, பேராசிரியர்கள் ராஜ்குமார், வீரபாண்டி ஒருங்கிணைத்தனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர் தேவிகா ராணி துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஈஸ்வரி தேன்மொழி தலைமையில், அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அரசு பள்ளியில் காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர். கிராம நாடக மேடையில் மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. உதவி தலைமை ஆசிரியர் செசிலி நன்றி கூறினார்.
நுால்கள் வழங்கும் விழா
மேலுார்: அரசு கல்லுாரியில் நுால்கள் வழங்கும் விழா நடந்தது. நகராட்சி தலைவர் முகமதுயாசின், கல்லுாரி முதல்வர் மணிமேகலா தேவி முன்னிலை வகித்தனர். எம்.பி., நிதியில் இருந்து ரூ.14.70 லட்சம் மதிப்பிலான 191 போட்டித் தேர்வுக்கான புத்தகங்களை எம்.பி., வெங்கடேசன் வழங்கினார். மா.கம்யூ., தாலுகா செயலாளர் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் மணவாளன் பங்கேற்றனர்.
கருத்தரங்கு
மதுரை என்.எம்.எஸ்.சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரியில் வணிக நிர்வாக மேலாண்மை கருத்தரங்கு நடந்தது. மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவன வளர்ச்சி மேலாளர் தேன்மொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று புதுமை, வணிகத்தில் அதன் தாக்கம் என்ற தலைப்பில் பேசினார். ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
மதுரை: அமெரிக்கன் கல்லுாரி முதுகலை தரவு அறிவியல் துறை, இளங்கலை தொழில் படிப்பு, ஐ.பி.எம்., கிளவுட்ஸ் டிஜிலேப் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், டிஜிலேப் மண்டல தலைமை அதிகாரி வினோத்குமார் குழுவினர் கையெழுத்திட்டனர். முதல்வர் கூறுகையில், நிறுவனம் மூலம் தொழில் நுட்ப மேம்பாடு, மெய்நிகர் ஆய்வகங்களுக்கு இலவச சேவை கிடைக்கும். தொழில் நுட்ப ரீதியாக மாணவர்களுக்கு இந்த ஒப்பந்தம் பயனுள்ளது என்றார்.
பட்டமளிப்பு விழா
சோழவந்தான்: கல்வி சர்வதேச பொதுப்பள்ளியில் 3 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கேம்பிரிட்ஜ் பல்கலை மதிப்பீடு ஆங்கில தேர்வு நடந்தது. முதல் தரத்தில் தேர்ச்சி பெற்ற 92 மாணவர்களை கவுரவிக்கும் வகையில் கேம்பிரிட்ஜ் ஆங்கிலம் மதிப்பீடு தெற்காசிய இயக்குனர் அருணாச்சலம், கணக்காளர் கெவின் காய்நெ பாராட்டி சான்றிதழ் வழங்கினர். வரும் கல்வி ஆண்டு முதல் புதிய இடைநிலை கல்விக்கான சர்வதேச பொது சான்றிதழ் (ஐ.ஜி.சி.எஸ்.இ.,) வாரிய கல்வி முறைக்காண பள்ளி அறிமுகம் செய்யப்பட்டது. குழும தலைவர் செந்தில்குமார், பள்ளிகளின் தாளாளர் குமரேஷ், குழும இயக்குனர் லில்லி, பள்ளிகளின் இயக்குனர் செந்தில் ராஜ்குமார் பங்கேற்றனர்.

