தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இரண்டாவது 'இன்டர்சிட்டி' மதுரை - சென்னை இடையே இயக்க எதிர்பார்ப்பு: பயணிகளுக்கு கூடுதலாக பகல் நேர ரயில் வசதி

 இரண்டாவது 'இன்டர்சிட்டி' மதுரை - சென்னை இடையே இயக்க எதிர்பார்ப்பு: பயணிகளுக்கு கூடுதலாக பகல் நேர ரயில் வசதி

 இரண்டாவது 'இன்டர்சிட்டி' மதுரை - சென்னை இடையே இயக்க எதிர்பார்ப்பு: பயணிகளுக்கு கூடுதலாக பகல் நேர ரயில் வசதி


ADDED : மார் 29, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையின் அடையாளமான 'வைகை' ரயிலை போன்று திண்டுக்கல் - கரூர் - சேலம் - காட்பாடி வழித்தடத்தில் சென்னைக்கு கூடுதலாக ஒரு 'இன்டர்சிட்டி' ரயில் இயக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர். மதுரையில் இருந்து தினமும் காலை 6:45 மணிக்கு புறப்படும் வைகை ரயில் மதியம் 2:15 மணிக்கு சென்னை எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 1:15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8:35 மணிக்கு மதுரை வருகிறது. திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக 495 கி.மீ., தொலைவை 7 மணி நேரம் 30 நிமிடங்களில் கடக்கிறது.

திருச்சிக்கு கூடுதல் ரயில் விரைவான, பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் 48 ஆண்டுகளாக பயணிகள் மத்தியில் நன்மதிப்பு பெற்ற ரயிலாக வைகை எக்ஸ்பிரஸ் திகழ்கிறது. இதனாலேயே இதில் டிக்கெட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டிய நிலை உள்ளதால் கூடுதல் ரயில் சேவை அவசியமாகிறது.

வைகையை போன்று முன்பு திருச்சி - எழும்பூர் இடையே இயக்கப்பட்ட 'பல்லவன்' ரயில் காரைக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப திருச்சி - தாம்பரம் இடையே மேலும் ஒரு புதிய ரயில் சேவை சமீபத்தில் தொடங்கப்பட்டது.

இதேபோல் மதுரையில் இருந்தும் சென்னைக்கு கூடுதலாக 'இன்டர்சிட்டி' ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. கரூர் - நாமக்கல் - சேலம் - காட்பாடி வழியாக மதுரை - சென்னை சென்ட்ரல் இடையே புதிய ரயில் சேவையை வழங்கலாம். 556 கி.மீ., துாரத்தை 8:30 மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் இயக்கலாம்.

மதுரைக்கும் வேண்டும் இதன்மூலம் மதுரை, கரூர், நாமக்கல் மாவட்ட பயணிகளுக்கு பகலில் சென்னை சென்றுவர கூடுதல் ரயில் கிடைக்கும். மதுரையில் இருந்து பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம் பகுதிகளுக்கு தினசரி பகல்நேர ரயில் சேவை கிடைக்கும். தென்தமிழகம், கொங்கு மண்டலம், வட தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரயிலாக திகழும் என்பதால் மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.

பயணிகள் கூறியதாவது: மதுரையில் இருந்து அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:00 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும் வகையில் புதிய ரயில் சேவையை இயக்கலாம். இந்த ரயிலை மதியம் 2:30 மணிக்கு கோவைக்கு புறப்பட்டு செல்லும் வகையில் மாற்றி விடலாம்.

கோவையில் இருந்து தினமும் காலை 6:20 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 1:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது. அதனை அங்கிருந்து மதியம் 2:15 மணிக்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு மதுரை வரும் வகையில் இயக்கலாம். வைகை - பல்லவன் ரயில்களில் 'ரேக் ஷேரிங்' செய்வது போல கோவை - சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே 'இன்டர்சிட்டி' ரயில்களை பகிர்ந்து இயக்கலாம் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us