ADDED : மார் 14, 2026 06:16 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சி வார்டு 24 கவண்டன்பட்டியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடக்கிறது. இதில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் புதிய சாக்கடை கட்டுமான பணிக்காக சில மாதங்களுக்கு முன் பள்ளம் தோண்டினர்.
தொடர்ந்து பணியை நடத்தாமல் விட்டுவிட்டனர். இதனால் கழிவுநீர் வெளியேற வழியின்றி வீடுகள் முன் தேங்கியுள்ளது. கட்டுமான பணிகளை விரைவில் நிறைவேற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்கள் பகுதியில் குடிநீர், சுகாதார வளாகம் பராமரிப்பு பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தருவதில்லை என்ற புகார்களை முன்வைத்தனர். போராட்டம் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. நகராட்சி பொறியாளர் சசிகுமார், போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என சமாதானம் செய்தனர்.
