/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தொழில் செய்வோருக்கு உதவும் 'சிங்கிள் விண்டோ' முறை
/
தொழில் செய்வோருக்கு உதவும் 'சிங்கிள் விண்டோ' முறை
ADDED : பிப் 11, 2025 05:12 AM
மதுரை: தொழில் செய்வோருக்கு 'சிங்கிள் விண்டோ' முறையில் தொழிலுக்கு தேவையான 218 வகையான அனுமதி, சான்றிதழ்கள் வழங்கப்படுவதாக மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஏற்கனவே தொழில் செய்வோர், புதிதாக தொழில் துவங்குவோருக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல்வேறு துறைகளில் சான்றிதழ் பெற வேண்டும். அல்லது புதுப்பிக்க வேண்டும். இதற்காக tnswp.com போர்ட்டலில் பொதுவான விண்ணப்பத்திற்கு ஆவணங்களுடன் பதிவேற்ற வேண்டும். இந்த போர்ட்டலை அந்தந்த மாவட்ட தொழில் மையங்களில் கண்காணிக்க முடியும்.
எந்தெந்த துறைகளில் சான்றிதழ் கேட்கப்பட்டுள்ளதென பார்த்து அதற்கேற்ப அந்தந்த துறைகளில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணம் கண்டறியப்படும்.
விதிமீறல்கள் இல்லாவிட்டால் சான்றிதழ்கள் எளிதாக ஆன்லைன் மூலம் பெற முடியும். ஒவ்வொரு துறை அலுவலகத்திற்கு சென்று தனியாக விண்ணப்பிக்க வேண்டாம்.
இந்த முறையில் மதுரையில் 2024 ஏப்.1 முதல் 2025 பிப். 10 வரை 1323 பேர் பல்வேறு சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்தனர்.
இதில் 1140 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 40 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மருந்து கடைகளுக்கு லைசென்ஸ், புதுப்பித்தல், தொழில்நுட்ப நிபுணர்களை மாற்றுவதற்கான லைசென்ஸ் பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கு சான்றிதழ்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது என்றார்.

