திறன் மேம்பாட்டு மையங்களின் மந்தமான செயல்பாடு 45 ஆயிரம் இளைஞர்கள் பாதிப்பு
திறன் மேம்பாட்டு மையங்களின் மந்தமான செயல்பாடு 45 ஆயிரம் இளைஞர்கள் பாதிப்பு
ADDED : செப் 26, 2026 05:21 AM
மதுரை: தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நடைபெறும் திறன்மேம்பாட்டு மையங்களின் மந்தமான செயல்பாடு காரணமாக 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மத்திய அரசின் சார்பில் 'தீனதயாள் உபாத்யாயா கிராமணி கவுசல்யா யோஜனா' திட்டத்தின் கீழ் கிராமப்புற பெண்கள், இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசு 25 சதவீதமும் நிதிப்பங்களிப்பு செய்கின்றன.
இதில் தமிழகத்தில் 145 மையங்களில் இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர், தையல், ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர், ஏ.ஐ., உட்பட 125 பயிற்சிகளை இலவசமாக அளிக்கின்றனர். பயிற்சியின்போது உதவித்தொகை, தங்குமிடம், உணவு, சீருடை, வேலைவாய்ப்பு பெறும் வரை 6 மாதங்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் மகளிர் திட்டம் சார்பில் திட்டம் நடக்கிறது. அரசுச் செயலராக ககன்தீப்சிங் பேடி இருந்த வரை நன்கு நடந்தது. கடந்த ஜூன் வரை 30 ஆயிரம் பேர் பயிற்சி முடித்து வெளியேறியுள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகையும், பயிற்சி அளித்த நிறுவனங்களுக்கு மாணவர்களுக்கான கட்டணமும் வழங்கவில்லை. பின்னர், ஜூலைக்கு பின் புதிய 2.0 திட்டத்தில் 45 ஆயிரம் பேர் பயிற்சிக்கு தேர்வு செய்துள்ளனர். ஆனால் பயிற்சி இன்னும் துவங்கவில்லை.
கடந்த ஆட்சியின் இறுதியில் திட்ட செயல்பாடுகளில் குறைகளை கண்டறிந்து 2 பேர் மீது நடவடிக்கை எடுத்து வேறு துறைக்கு மாற்றம் செய்துள்ளனர். அதில் ஒருவர் மீண்டும் இணை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நிர்வாக இயக்குனர் உட்பட உயரதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர். அதன்பின்பு புதிய அதிகாரிகளுக்கு ஆர்வமின்மை, ஒருங்கிணைப்பு இன்மை, மாவட்ட அதிகாரிகளை சந்திக்காதது போன்ற காரணங்களாலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
புதிய திட்டத்திற்கு மத்திய அரசின் சார்பில் சில நுாறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனை செலவு செய்யாமல் இருந்துள்ளனர். கடந்த வாரம் தமிழகம் வந்த மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் இதுபற்றி கேட்டுள்ளார்.
புதிய 2.0 திட்டத்தை செயல்படுத்தாதற்கு அதிருப்தி தெரிவித்து, நிதியை திரும்ப அனுப்பும்படி தெரிவித்துள்ளார். பிரதமரின் விருப்பமான இத்திறன் மேம்பாட்டு திட்டம் மீண்டும் சுறுசுறுப்படைய, அரசு செயலாளர், நிர்வாக இயக்குனர், இணை இயக்குனர் என முக்கிய பொறுப்புகளில் ஆர்வமுள்ளோரை நியமிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
